தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி எனப்படும் பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஒரு மிக முக்கியமான எச்சரிக்கை அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏப்ரல் 16, 2026 முதல், உங்கள் பிஎஃப் கணக்கின் உயிர்நாடியான யூஏஎன் (UAN) எண்ணை ஆக்டிவேட் செய்யும் வசதியில் இபிஎஃப்ஓ (EPFO) நிர்வாகம் அதிரடி மாற்றத்தைச் செய்துள்ளது. இதுவரை நாம் அதிகாரப்பூர்வ இணையதளமான இபிஎஃப்ஓ மெம்பர் போர்ட்டலில் செய்து வந்த அந்த வசதி, இனி நேரடியாக அந்த இணையதளத்தில் கிடைக்காது.
நீங்கள் இணையதளத்திற்குச் சென்று அந்த லிங்க்கை கிளிக் செய்தாலும், அது தானாகவே உங்களை மத்திய அரசின் உமாங் (UMANG) செயலிக்குத்தான் இப்போது அழைத்துச் செல்கிறது. உங்கள் பிஎஃப் கணக்கிலிருந்து பணத்தை எடுக்கவோ அல்லது ஒவ்வொரு மாதமும் உங்கள் நிறுவனம் எவ்வளவு பணம் செலுத்துகிறது என்பதைப் பார்க்கவோ இந்த யூஏஎன் ஆக்டிவேஷன் மிகவும் அவசியம் என்பதால், இந்த மாற்றத்தைப் பற்றிப் பயனாளர்கள் தெரிந்துகொள்வது அவசியமாகிறது.
யூஏஎன் எண் ஆக்டிவேட் செய்யப்பட்டிருந்தால் மட்டுமே உங்கள் பிஎஃப் பாஸ்புக்கைப் பார்க்க முடியும். குறிப்பாக நீங்கள் ஒரு வேலையை விட்டு விலகிய பிறகு உங்கள் பிஎஃப் பணத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்றாலும் அல்லது ஒரு நிறுவனத்திலிருந்து மற்றொரு நிறுவனத்திற்குப் பணத்தை மாற்ற வேண்டும் என்றாலும் இந்த ஆக்டிவேஷன் கட்டாயமாகும்.
மேலும், உங்கள் வங்கி கணக்கு விவரங்கள், பான் கார்டு மற்றும் ஆதார் விவரங்களை இணைப்பதற்கும் இதுவே அடிப்படை. இதுவரை இந்த வசதி இணையதளத்தில் எளிதாகக் கிடைத்து வந்த நிலையில், தற்போது கூடுதல் பாதுகாப்பு காரணங்களுக்காகவும், தொழில்நுட்ப மேம்பாட்டிற்காகவும் இதனை முழுமையாக உமாங் செயலிக்கு இபிஎஃப்ஓ மாற்றியுள்ளது.
இதனை ஆக்டிவேட் செய்ய விரும்புவோர் முதலில் தங்கள் மொபைலில் உமாங் செயலியைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். பின்னர் அதில் உள்ள இபிஎஃப்ஓ சேவைகள் பிரிவிற்குச் சென்று “UAN Activation” என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
இதற்கு உங்களிடம் உங்கள் யூஏஎன் எண், ஆதார் கார்டு எண் மற்றும் உங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் ஆகியவை கைவசம் இருப்பது அவசியம். செயலியில் விவரங்களை உள்ளிட்ட பிறகு உங்கள் மொபைலுக்கு வரும் ஓடிபி (OTP) எண்ணைப் பதிவு செய்தவுடன் உங்கள் யூஏஎன் எண் ஆக்டிவேட் ஆகிவிடும். ஒருமுறை ஆக்டிவேட் செய்துவிட்டால், உங்கள் மொபைல் எண் தானாகவே இபிஎஃப்ஓ கணக்கில் பதிவு செய்யப்பட்டுவிடும்.
எனவே, பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள் கடைசி நேரப் பதற்றத்தைத் தவிர்க்க இப்போதே இந்த புதிய முறையைப் பின்பற்றி தங்கள் கணக்கைச் சரிபார்த்துக் கொள்வது நல்லது.
