பாஸ்போர்ட் வைத்திருப்போர் கவனத்திற்கு! விதிகளில் அதிரடி மாற்றம்!

இந்தியக் குடியுரிமை பெறுவதற்கான விதிகளில் மத்திய உள்துறை அமைச்சகம் இப்போது ஒரு மிகப்பெரிய அதிரடி மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. 2009-ஆம் ஆண்டின் இந்தியக் குடியுரிமை விதிகளில் திருத்தம் செய்து, மத்திய அரசு திங்கள்கிழமை அன்று புதிய அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்தப் புதிய விதிகளின்படி, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியா வந்து, இங்கே குடியுரிமை கோரி விண்ணப்பிக்கும் நபர்கள், தங்களது தாய்நாட்டுப் பாஸ்போர்ட் குறித்த முழுமையான விவரங்களைத் தெளிவாகத் தெரிவிக்க வேண்டியது இனி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கூடுதல் தகவல்கள் இப்போது அரசியல் மற்றும் சமூக தளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

மத்திய அரசு வெளியிட்டுள்ள அந்த அரசிதழ் அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர்கள் தங்களிடம் தற்போது பயன்பாட்டில் உள்ள அல்லது காலாவதியான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அல்லது வங்கதேச நாட்டுப் பாஸ்போர்ட்டுகள் இருக்கிறதா இல்லையா என்பது குறித்த ஒரு உறுதிமொழிப் பத்திரத்தை அளிக்க வேண்டும்.

ஒருவேளை விண்ணப்பதாரரிடம் அந்த நாட்டுப் பாஸ்போர்ட் இருந்தால், அதன் எண், பாஸ்போர்ட் வழங்கப்பட்ட தேதி, இடம் மற்றும் அது காலாவதியாகும் தேதி போன்ற அனைத்து நுணுக்கமான தகவல்களையும் அவர்கள் சமர்ப்பிக்க வேண்டும். பாதுகாப்புக் காரணங்களுக்காகவும், தரவுச் சரிபார்ப்பிற்காகவும் இந்த நடைமுறை மிகக் கடுமையாக்கப்பட்டுள்ளது.

இதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், ஒரு நபரின் குடியுரிமை விண்ணப்பம் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட பிறகு, அவர்கள் தங்களது பழைய நாட்டுப் பாஸ்போர்ட்டை உடனடியாக ஒப்படைக்க வேண்டும். குடியுரிமை அங்கீகரிக்கப்பட்ட 15 நாட்களுக்குள், சம்பந்தப்பட்ட தபால் நிலையக் கண்காணிப்பாளரிடம் (Senior Superintendent of Post) தங்களது செல்லத்தக்க அல்லது காலாவதியான பாஸ்போர்ட்டைச் ஒப்படைக்க வேண்டும் என அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த விதிமுறைகளைச் சரியாகப் பின்பற்றினால் மட்டுமே அவர்களுக்கான குடியுரிமை நடைமுறைகள் முழுமையாக நிறைவடையும் எனத் தெரிகிறது. இந்தத் திருத்தங்கள் அனைத்தும் 2019-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டமான சிஏஏ (CAA) விதிகளின் கீழ் வருபவர்களுக்குப் பொருந்தும்.

அதாவது பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் சிறுபான்மையினராக இருந்து, மத ரீதியான துன்புறுத்தல்களால் 2014-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதிக்கு முன்பாக இந்தியா வந்த இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்த புதிய விதிகள் ஒரு முக்கியமான வழிகாட்டுதலாக இருக்கும். இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் நிர்வாக ரீதியான வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவே இந்த அதிரடி மாற்றங்களை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.

Related News

Latest News