மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான மற்றும் மிக முக்கியமான செய்தி வெளியாகியுள்ளது. 8-வது ஊதியக்குழு பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டால், அரசு ஊழியர்களுக்குப் பெரிய அளவிலான சம்பள உயர்வு மற்றும் அரியர்ஸ் தொகை கிடைக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேசிய கவுன்சில் மற்றும் கூட்டு ஆலோசனை இயந்திரத்தின் (NC-JCM) ஊழியர் தரப்பு, புதிய ஊதியக்குழுவில் ‘பிட்மென்ட் பேக்டர்’ (Fitment Factor) எனப்படும் பெருக்கல் காரணியை 3.833 ஆக நிர்ணயிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. இது கடந்த 7-வது ஊதியக்குழுவில் இருந்த 2.57 என்ற அளவைவிட மிக அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த புதிய பிட்மென்ட் பேக்டர் முறை ஏற்றுக்கொள்ளப்பட்டால், மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம் தற்போதுள்ள 18,000 ரூபாயிலிருந்து 69,000 ரூபாயாக உயர வாய்ப்புள்ளது. சம்பள உயர்வு மட்டுமல்லாமல், ஊழியர்களுக்குக் கணிசமான அரியர்ஸ் தொகையும் கிடைக்கக்கூடும். 8-வது ஊதியக்குழு பரிந்துரைகள் 2026 ஜனவரி 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஊதியக்குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, அரசு அதனை ஆய்வு செய்து ஒப்புதல் அளிக்கும் கால அவகாசத்தைக் கணக்கிட்டால், அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதவாக்கில் இது அமல்படுத்தப்படலாம் என்று தெரிகிறது. அப்படி அமல்படுத்தப்படும் பட்சத்தில், ஊழியர்களுக்குச் சுமார் 20 மாதங்களுக்கான அரியர்ஸ் தொகை கிடைக்க வாய்ப்புள்ளது.
இதன் அடிப்படையில் கணக்கிட்டால், லெவல் 1 ஊழியர்களுக்கு 10 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான அரியர்ஸ் தொகையும், லெவல் 5 ஊழியர்களுக்கு சுமார் 16 லட்சம் ரூபாய் வரையிலான அரியர்ஸ் தொகையும் கிடைக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இது தற்போது ஊழியர் சங்கங்கள் முன்மொழிந்துள்ள ஒரு பரிந்துரை மட்டுமே என்பதை ஊழியர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்த பரிந்துரையை அரசு ஏற்றுக்கொள்கிறதா, பிட்மென்ட் பேக்டர் மாற்றப்படுமா மற்றும் இது எப்போது அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வரும் என்பது போன்ற இறுதி முடிவுகளை மத்திய அரசுதான் எடுக்க வேண்டும். தற்போதைய நிலையில், இந்த ஊதியக்குழு பரிந்துரைகள் மீதான எதிர்பார்ப்பு மத்திய அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்காக ஊழியர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
