பாகிஸ்தான் தற்போது உள்நாட்டில் அரசியல், பாதுகாப்பு உள்ளிட்ட பல பிரச்சனைகளால் சிக்கி தவிக்கும் நிலையில், அதன் எல்லைப் பகுதியான ஆப்கானிஸ்தான் எல்லையில் மீண்டும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதிகளில் படைகள், ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களை அதிக அளவில் குவிக்கத் தொடங்கியுள்ளதால் புதிய மோதல் வெடிக்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக பாகிஸ்தானின் உள்நாட்டு நிலைமை நிலைத்தன்மையற்றதாக இருந்து வருகிறது. இந்த சூழலிலேயே தாலிபான் அமைப்பான TTP என்ற தீவிரவாத குழு பாகிஸ்தானில் பல இடங்களில் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த தாக்குதல்களுக்கு ஆப்கானிஸ்தான் ஆதரவளிக்கிறது என்று பாகிஸ்தான் குற்றம் சாட்டி வருகிறது. சில வாரங்களுக்கு முன்னர் இதனுடன் தொடர்புடைய தாக்குதல் ஒன்றை பாகிஸ்தான் காபூலில் நடத்தியது. இதுவே இரு நாடுகளிடையே உருவான புதிய பதற்றத்தின் தீவிரத்தை அதிகரித்தது.
தற்காலிகமாக எட்டப்பட்டிருந்த போர் நிறுத்தம் இப்போது காற்றில் பறக்கும் நிலையில் உள்ளது. Durand Line எனப்படும் சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதியில் இரு தரப்பும் பீரங்கி மற்றும் ராணுவ தளவாடங்களை நிலைநிறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எல்லையில் நிலைமை கைமீறிப் போகும் அபாயம் இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் கூறுகின்றன.
சமன்-ஸ்பின் போல்டிக், அங்கூர் அட்டா, குர்ரம்–நங்கர்ஹார், தோர்கம் உள்ளிட்ட முக்கிய எல்லைப்பகுதிகளில் பாகிஸ்தான் ட்ரோன்களை பயன்படுத்தி கடுமையான கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. இதனால் மோதல் தீவிரமடையும் அபாயம் உறுதிபடுத்தப்படுவதாகவே இருக்கிறது.
மேலும், சமீபத்தில் பாகிஸ்தான்–சவுதி அரேபியா இடையே கையெழுத்தான பாதுகாப்பு ஒப்பந்தமும் குறிப்பிடத்தக்கது. எந்த நாடு பாகிஸ்தானைத் தாக்கினாலும், சவுதி அரேபியா பாகிஸ்தானுக்கு துணை நிற்கும் என அந்த ஒப்பந்தம் குறிப்பிடுகிறது. இதனால் ஆப்கானிஸ்தான்–பாகிஸ்தான் பதற்றம் பிராந்திய ரீதியில் பெரும் விளைவுகளை ஏற்படுத்தும் என்ற அச்சம் உருவாகியுள்ளது.
