தங்க நகை வாங்கப்போறீங்களா? அமலுக்கு வந்த புது நடைமுறை. என்ன தெரியுமா?

இந்தியாவில் தங்கம் வாங்கும் முறையில் விரைவில் முக்கியமான மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளன. வாடிக்கையாளர்களின் பாதுகாப்பையும் நம்பிக்கையையும் உயர்த்தும் நோக்கில் மத்திய அரசு புதிய திட்டத்தை செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இந்த மாற்றங்களை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்துவதற்கான ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும், நகைத் துறை நிறுவனங்களின் ஒத்துழைப்பும் கிடைத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த திட்டத்தின் முக்கிய அம்சமாக, ஒவ்வொரு தங்க நகைக்கும் தனித்துவமான HUID அதாவது Hallmark Unique Identification எண் வழங்குவது கட்டாயமாக்கப்பட உள்ளது. நகையின் வடிவம், எடை உள்ளிட்ட தனிச்சிறப்புகளின் அடிப்படையில் இந்த எண் வழங்கப்படும். இதன் மூலம் போலி நகைகள் விற்பனை செய்யப்படுவது தடுக்கப்படும். மேலும், ஒருமுறை வழங்கப்பட்ட HUID எண்ணை மறுபடியும் பயன்படுத்த முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒரு நகை உருக்கப்பட்டாலும் அதற்கான HUID எண்ணை வேறு நகைகளுக்கு பயன்படுத்த அனுமதி வழங்கப்படாது. இதன் மூலம் ஒரே எண்ணை பல நகைகளுக்கு பயன்படுத்தும் மோசடி முறைகள் முற்றிலும் கட்டுப்படுத்தப்படும். இதனால் வாடிக்கையாளர்கள் வாங்கும் தங்கத்தின் தூய்மையை உறுதிப்படுத்துவது எளிதாக இருக்கும்.

இந்த முடிவுக்கு முக்கிய காரணமாக கடந்த காலங்களில் எழுந்த புகார்கள் அமைந்துள்ளன. சில நேரங்களில் ஹால்மார்க் எண் இருந்தாலும், நகையின் தூய்மை வேறுபட்டதாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும், ஒரே HUID எண் பல நகைகளில் பயன்படுத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், ஹால்மார்க் விவரங்கள், நகையின் படம் மற்றும் எடை உள்ளிட்ட அனைத்து தகவல்களும் டிஜிட்டல் முறையில் பதிவு செய்யப்படும். செயற்கை நுண்ணறிவு உதவியுடன் போலி ஹால்மார்க் முத்திரையை கண்டறியும் வசதியும் அறிமுகப்படுத்தப்படும்.

2025ம் ஆண்டு சில பகுதிகளில் சோதனை முறையில் செயல்படுத்தப்பட்ட இந்த திட்டம் நல்ல பலனை அளித்துள்ளது. இந்த நடைமுறை அமலுக்கு வந்தால் தங்கம் வாங்கும் முறையில் அதிக வெளிப்படைத்தன்மை உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

Latest News