தமிழ்நாட்டில் வீடமைப்பிற்காக அரசு வழங்கும் முக்கிய திட்டங்களில் ஒன்று, கலைஞர் கனவு இல்லம். இது புதிய வீடுகளை கட்ட விரும்புபவர்களுக்கானது. அதேபோல், தற்போது பழைய வீடுகளில் வசித்து, அவற்றை மீண்டும் கட்ட வேண்டும் என விரும்பும் நபர்களுக்கும் தமிழக அரசு நிதியுதவி அளிக்க உள்ளது. அதற்கான புதிய திட்டமே “முதலமைச்சரின் வீடுகள் மறுகட்டுமானத் திட்டம்”.
இந்த திட்டம் தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் மூலம், 2000–2001ம் ஆண்டுக்கு முந்தைய காலத்தில் அரசு திட்டங்களின் கீழ் கட்டப்பட்ட வீடுகள், தற்போது மிகவும் பழுதடைந்து பயன்பாடின்றி இருப்பினும், மீண்டும் கட்டுவதற்கான வாய்ப்பு வழங்கப்படுகிறது.
இத்தகைய வீடுகளாக, இந்திரா நினைவு குடியிருப்பு, தாட்கோ, பழங்குடியினருக்கான குடியிருப்புகள் போன்றவை குறிப்பிடப்படுகின்றன. குறிப்பாக சாய்தளக் கூரை, ஓடுகளால் ஆனது போன்ற வீடுகள் மட்டுமே இந்தத் திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்படுகின்றன.
இந்த திட்டத்தின் கீழ், 210 சதுர அடிக்கு உட்பட்ட வீடுகளுக்கு ரூ.2.40 லட்சம் நிதி வழங்கப்படும். இந்த தொகை பயனாளியின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும். கிராம ஊராட்சி அளவில் உள்ள தேர்வுக்குழு மூலமாக பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தகுதியானவர்கள், தங்கள் நில உரிமை ஆவணங்கள், ஆதார், வங்கி கணக்கு, குடும்ப அட்டை, வேலை உறுதி அட்டை, புகைப்படங்கள் மற்றும் தற்போதைய வீட்டின் புகைப்படங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பங்களை நேரடியாகவும், அல்லது அஞ்சல் மூலமாகவும் 25 ஏப்ரல் 2025 மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
இதுவே உங்கள் வீடு மறுபடியும் புதிதாக மாறும் ஒரு பெரிய வாய்ப்பு. தகுதி உள்ளவர்கள் இந்த திட்டத்தை தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.