தற்போது தங்கத்தின் விலை தாறுமாறாக அதிகரித்து வருகிறது. சமீப காலமாக தங்கத்தின் விலை ஒரே நாளில் இருமுறை உயர்ந்து வருகிறது. இது நகைப்பிரியர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது. இதன் முக்கிய காரணங்களில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி மற்றும் சர்வதேச பொருளாதார சூழல் ஆகியவை அடங்கும்.
இந்த சூழலில், டிஜிட்டல் தங்க முதலீடும் அதிகரித்து வந்தாலும், இந்திய பத்திரங்கள் மற்றும் பங்கு பரிவர்த்தனை வாரியம் (SEBI) அதில் உள்ள ஆபத்துக்களை எச்சரிக்கை விடுத்து, முதலீட்டாளர்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளது.
SEBI அறிக்கை தெரிவிப்பதாவது, ஒழுங்குப்படுத்தப்பட்ட தயாரிப்புகள் மூலம் மட்டுமே தங்க முதலீடு பாதுகாப்பானதாக இருக்கும். சில ஆன்லைன் தளங்களில் டிஜிட்டல் தங்கம் என்ற பெயரில் சந்தைப்படுத்தப்படும் முதலீடுகள் வழக்கமான தங்கத்திற்கு மாற்றாக இருக்கலாம். அதே நேரத்தில் டிஜிட்டல் தங்கம் மற்றும் இ-தங்க பத்திரங்கள் ஆகியவற்றில் முதலீடு செய்வதற்கு எவ்வித பாதுகாப்பு வழிமுறைகளும் கிடையாது என கூறப்பட்டுள்ளது.
எனவே, முதலீட்டாளர்கள் நல்ல ஆராய்ச்சியுடன் பாதுகாப்பான முறையில் மட்டுமே டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்பது SEBI-யின் முக்கியக் கருத்தாகும்.
