இப்போது தமிழ்நாட்டில் வீதிகளில் அலைய வேண்டிய காலம் இல்லை. ரேஷன் அட்டை தொடர்பான அனைத்து சேவைகளையும் நாம் வீட்டிலிருந்தபடியே இணையத்தின் மூலம் பெறலாம்.
புதிய ரேஷன் அட்டைக்கு விண்ணப்பிக்க வேண்டுமானால், அல்லது பெயர் மாற்றம், உறுப்பினர் சேர்த்தல், நீக்கம் போன்ற வேலைகளுக்கு, நீங்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அலுவலகம் செல்ல வேண்டிய அவசியமில்லை.
உங்கள் விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களை சரியாக சேர்க்க வேண்டும். ஆதார் அட்டை, குடும்பத் தலைவியின் புகைப்படம், மின் கட்டண ரசீது, வீட்டு வரி ரசீது, வாடகை வீடாக இருந்தால் வாடகை ஒப்பந்தம் ஆகியன அவசியம்.
இந்த ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பின்னர் அதிகாரிகள் உங்களை நேரில் அழைத்து விசாரிக்கலாம். ஆவணங்கள் உண்மையானவை என்றால், விரைவில் உங்கள் விண்ணப்பத்திற்கு ஒப்புதல் கிடைக்கும்.
இந்த செயல்முறை 15 நாட்களில் இருந்து சில மாதங்கள் வரை இருக்கலாம். ஒப்புதல் கிடைத்தவுடன் உங்கள் புதிய ரேஷன் அட்டை அச்சிடும் பணிக்கு செல்லும். அதனுடன், உங்கள் ரேஷன் கடை விவரங்களும் தெரிவிக்கப்படும்.
அதே நேரத்தில், அட்டை அச்சாக வருவதற்கும் முன், மின்னணு ரேஷன் அட்டையை இணையதளத்தில் உடனே பதிவிறக்கம் செய்யலாம்.
இதை எப்படி செய்வது என்றால் —
ஒப்புதல் செய்தி வந்ததும் tnpds.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள். அங்கே “பயனாளர் நுழைவு” என்ற பகுதியைத் தேர்வு செய்யுங்கள்.
உங்கள் ரேஷன் அட்டையில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிடுங்கள். உங்கள் கைபேசிக்கு ஓ.டி.பி வரும். அதை உள்ளிட்டவுடன் உங்கள் மின்னணு ரேஷன் அட்டை காண்பிக்கப்படும். அதை PDF கோப்பாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
இது அரசுத்துறை சேவைகளுக்குப் பயன்படும். ஆனால் இதைப் பயன்படுத்தி நீங்கள் உடனே பொருள் வாங்க முடியாது.
அட்டையின் அச்சுப் பதிப்பு வந்தபின், குடும்பத் தலைவர் ரேஷன் கடைக்கு சென்று கைரேகையை பதிவு செய்ய வேண்டும். அதன் பிறகே உங்கள் அட்டை செயல்பாட்டில் வரும். அப்போதுதான் நீங்கள் உரிமையுடன் ரேஷன் பொருட்களைப் பெற முடியும்.