பான் கார்டு என்பது இந்தியர்களின் முக்கிய அடையாள ஆவணங்களில் ஒன்றாகும். இது ஒரு புகைப்பட அடையாள அட்டையாக மட்டுமல்லாமல், வருமானவரி கணக்கு தாக்கல் செய்தல், பங்குச் சந்தையில் முதலீடு செய்தல், வங்கி கணக்கு தொடங்குதல், காப்பீடு பெறுதல் உள்ளிட்ட பல்வேறு நிதிசார் சேவைகளுக்கு கட்டாயமாக பயன்படுத்தப்படுகிறது. பான் கார்டு வழங்கும் அமைப்பு Income Tax Department ஆகும்.
புதிய பான் கார்டுக்கு வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் மூலம் எளிதாக விண்ணப்பிக்கலாம். தேவையான ஆவணங்கள் தயார் நிலையில் இருந்தால், சில நிமிடங்களில் விண்ணப்ப செயல்முறையை முடிக்கலாம்.
இதற்காக Protean eGov Technologies நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும். அங்கு “Tax Modernization” பகுதியில் “PAN” என்பதைத் தேர்வு செய்து, பின்னர் “New Application” என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
இந்திய குடிமகனாக இருந்தால் Form 49A என்பதைத் தேர்வு செய்ய வேண்டும். அதன் பிறகு தனிநபராக (Individual) விண்ணப்பிக்கிறீர்களா அல்லது நிறுவனமாக விண்ணப்பிக்கிறீர்களா என்பதைத் தேர்வு செய்ய வேண்டும். “Individual” என்பதை கிளிக் செய்து தொடரலாம்.
அடுத்ததாக, ஆதார் அட்டையில் உள்ள பெயரின் எழுத்துப்பிழையில்லாத (spelling) வடிவிலேயே உங்கள் பெயரை உள்ளிட வேண்டும். தொடர்ந்து பிறந்த தேதி, மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி உள்ளிட்ட விவரங்களை சரியாக பதிவு செய்து “Submit” செய்ய வேண்டும்.
பின்னர், புகைப்படம், முகவரி சான்று, பிறந்த தேதி சான்று போன்ற தேவையான ஆவணங்களை ஸ்கேன் செய்து அப்லோடு செய்ய வேண்டும். விண்ணப்பதாரரின் சமீபத்திய புகைப்படத்தையும் பதிவேற்ற வேண்டும்.
இதற்குப் பிறகு விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தி இறுதியாக விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். பொதுவாக 15 நாட்களுக்குள் பதிவு செய்யப்பட்ட முகவரிக்கு பான் கார்டு அனுப்பப்படும்.
பான் கார்டு விண்ணப்பத்திற்கு அடையாள ஆவணமாக பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம் போன்றவை பயன்படுத்தலாம். முகவரி சான்றாக ஆதார், பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் அல்லது வங்கி பாஸ்புக் பயன்படுத்தலாம். பிறந்த தேதி சான்றாக பிறப்பு சான்றிதழ், பாஸ்போர்ட், ஆதார் அட்டை அல்லது ஓட்டுநர் உரிமம் பயன்படுத்தலாம்.
