பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயருகிறதா? SBI எச்சரிக்கை!!

State Bank of India (SBI) ரிசர்ச்சின் ‘Ecowrap’ அறிக்கை, இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் கிடைக்கும் பலன்களை இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு முற்றிலும் பாதிக்கக்கூடும் என எச்சரித்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததையடுத்து, இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்பட்டது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரிக்கும் அபாயம் உருவாகியுள்ளது.

SBI அறிக்கையின் படி, ரூபாயின் மதிப்பு மேலும் ரூ.2 வரை சரிந்தால், கச்சா எண்ணெய் இறக்குமதி செலவு அதிகரித்து, தற்போதைய எரிபொருள் விலை உயர்வால் கிடைக்கும் பலன்கள் முழுமையாக குறைந்து போகும் நிலை ஏற்படும். எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் (OMCs) சந்திக்கும் நஷ்டத்தை குறைப்பதற்காகவே இந்த விலை உயர்வு செய்யப்பட்டதாக அறிக்கை கூறுகிறது.

தற்போது சில்லறை விலைகள் மாற்றப்படாததால், எண்ணெய் நிறுவனங்கள் தினமும் சுமார் ரூ.1000 கோடி வரை இழப்பை சந்தித்து வருகின்றன. இது ஆண்டுக்கு சுமார் ரூ.3.6 லட்சம் கோடி நஷ்டமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. லிட்டருக்கு ரூ.3 உயர்வு மூலம் எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.52,700 கோடி வரை நிவாரணம் கிடைக்கும் என கணிக்கப்பட்டாலும், அது FY27-க்கான மொத்த இழப்பில் 15 சதவீதத்தை மட்டுமே ஈடுசெய்யும் என கூறப்பட்டுள்ளது.

மேலும், FY27-ல் ஒரு அமெரிக்க டாலருக்கு ரூ.94 என்ற மாற்று விகிதமும், ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 106 டாலராகவும் இருந்தால், இறக்குமதி செலவு பேரலுக்கு ரூ.9,964 ஆக இருக்கும் என அறிக்கை கணித்துள்ளது. இதனுடன், மேற்கு ஆசியா மோதல் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி பிரச்சினைகள் காரணமாக உலகளாவிய கச்சா எண்ணெய் சந்தைகளும் தொடர்ந்து அழுத்தத்தில் உள்ளதாக SBI ரிசர்ச் தெரிவித்துள்ளது.

Related News

Latest News