ரூபாய் நோட்டு மொத்தமாக மாறப் போகிறதா? ஆர்பிஐ அதிரடி அறிவிப்பு!

கடந்த சில நாட்களாகவே சமூக வலைதளங்களில் ஒரு செய்தி காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. அதாவது, இந்திய ரிசர்வ் வங்கி தற்போதுள்ள பேப்பர் கரன்சிகளைத் திரும்பப் பெற்றுவிட்டு, அதற்குப் பதிலாக ஜூன் 30, 2026 முதல் பிளாஸ்டிக் எனப்படும் ‘பாலிமர்’ நோட்டுகளை அறிமுகப்படுத்தப் போவதாக அந்தச் செய்தி கூறுகிறது.

இதைப் பார்த்த பலரும் தங்களின் கையில் இருக்கும் பணத்தின் மதிப்பு என்னவாகுமோ என்று பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர். ஆனால், இந்தச் செய்தி குறித்த உண்மைத் தன்மையை மத்திய அரசின் அதிகாரப்பூர்வமான ‘பிஐபி’ (PIB) உண்மைச் சரிபார்ப்பு குழு இப்போது உடைத்துள்ளது. சமூக வலைதளங்களில் பரவும் அந்தச் செய்தி முற்றிலும் ‘தவறானது’ மற்றும் ‘பொய்யானது’ என்று பிஐபி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

ஜூன் 30, 2026-க்குள் பேப்பர் நோட்டுகளைத் திரும்பப் பெறும் எந்தவொரு திட்டமும் இந்திய ரிசர்வ் வங்கியிடம் தற்போதைக்கு இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. இருப்பினும், இந்த வதந்தி எங்கிருந்து கிளம்பியது தெரியுமா? சமீபத்தில் நடந்த ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை கூட்டத்திற்குப் பிறகு பேசிய ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா, இந்தியாவில் ‘பாலிமர்’ எனப்படும் பிளாஸ்டிக் நோட்டுகளை அறிமுகப்படுத்துவது குறித்து ஆர்பிஐ பரிசீலித்து வருவதாக ஒரு தகவலை வெளியிட்டார்.

ஆனால், அவர் சொன்னது என்னவென்றால், இது ஒரு ஆரம்பக்கட்ட ஆலோசனை மட்டுமே; இதன் சாதக பாதகங்களை ஆய்வு செய்த பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும் என்றுதான். அதைத்தான் சிலர் தவறாகப் புரிந்துகொண்டு, குறிப்பிட்ட ஒரு தேதியை வைத்து வதந்தியைப் பரப்பியுள்ளனர்.

தற்போது இந்தியாவில் நாம் பயன்படுத்தும் ரூபாய் நோட்டுகள் 100 சதவீதம் பருத்தியால் (Cotton) தயாரிக்கப்படுபவை. பொதுவாக ஒரு புதிய வடிவிலான நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டால் கூட, பழைய நோட்டுகள் உடனடியாகச் செல்லாததாக மாறிவிடாது. அவை புழக்கத்திலிருந்து மெல்ல மெல்லத் தான் திரும்பப் பெறப்படும். எனவே, வாட்ஸ்அப் மற்றும் முகநூலில் வரும் ஆதாரமற்ற செய்திகளை நம்பி யாரும் அச்சப்பட வேண்டாம்.

பணப் பரிவர்த்தனை மற்றும் கரன்சி தொடர்பான எந்த ஒரு தகவலையும் ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டுமே பார்த்து உறுதி செய்து கொள்ளுங்கள். இது போன்ற வதந்திகளைப் பரப்புவதும், அதை நம்புவதும் தேவையற்ற குழப்பத்தையே ஏற்படுத்தும்.

Related News

Latest News