Monday, February 9, 2026

2026-ல் வரும் ஆப்பிளின் iphone fold ! என்ன ஸ்பெஷல்?

சாம்சங், ஒன்பிளஸ் என்று பல நிறுவனங்களும் மடிக்கக்கூடிய போன்களை வெளியிட்டு, சந்தையில் கலக்கிக்கொண்டிருக்கும் நிலையில், ஆப்பிள் நிறுவனம் எப்போது தனது மடக்கக்கூடிய ஐபோனைக் கொண்டுவரும் என்று, ஒட்டுமொத்த உலகமும் காத்துக்கொண்டிருந்தது. அந்தக் காத்திருப்புக்கு இப்போது ஒரு விடை கிடைக்கப் போகிறது.

வரும் 2026-ம் ஆண்டில், ஆப்பிள் தனது முதல் மடிக்கக்கூடிய ஐபோனை வெளியிடப் போவதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. ஆனால், இந்த போனில் ஒரு பெரிய ட்விஸ்ட்டை ஆப்பிள் வைக்கப் போகிறது.

அந்த ட்விஸ்ட் என்னவென்றால், இந்த புதிய ‘ஐபோன் ஃபோல்டில்’, நீங்கள் சிம் கார்டைப் போடவே முடியாது. ஆம், இது முழுக்க முழுக்க ‘eSIM’ தொழில்நுட்பத்தில் மட்டுமே இயங்கும் என்று கூறப்படுகிறது. இந்த ஆண்டு வெளியான ‘ஐபோன் ஏர்’ மாடலில், ஆப்பிள் இந்த eSIM தொழில்நுட்பத்தைச் சோதனை செய்து பார்த்தது.

அந்த மாடல் பெரிய அளவில் விற்பனையாகவில்லை என்றாலும், அதன் மூலம் கிடைத்த அனுபவத்தை வைத்து, தனது அடுத்த பெரிய தயாரிப்பான ஐபோன் ஃபோல்டில், இந்தத் தொழில்நுட்பத்தை முழுமையாகக் கொண்டுவர ஆப்பிள் திட்டமிட்டுள்ளது.

இந்த eSIM தொழில்நுட்பத்தால் என்ன லாபம்? சிம் கார்டிற்கான ஸ்லாட்டை நீக்குவதால், போனுக்குள் நிறைய இடம் மிச்சமாகும். அந்த இடத்தில், ஒரு பெரிய பேட்டரியையோ, அல்லது போன் சூடாகாமல் தடுக்கும் ஒரு பெரிய கூலிங் சிஸ்டத்தையோ வைக்க முடியும். இதனால், போனின் செயல்திறன் இன்னும் அதிகரிக்கும்.

ஆனால், இதில் ஒரு சிக்கலும் இருக்கிறது. இந்தியா போன்ற நாடுகளில், ஜியோ, ஏர்டெல் போன்ற நிறுவனங்கள் eSIM வசதியை வழங்கினாலும், சீனாவின் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இந்தத் தொழில்நுட்பத்திற்கு இன்னும் முழுமையாக மாறவில்லை. சீனா, ஆப்பிளின் மிகப்பெரிய சந்தைகளில் ஒன்று என்பதால், இந்த eSIM விஷயம், ஆப்பிளுக்கு ஒரு பெரிய சவாலாக அமையும்.

இந்த புதிய ஐபோன் ஃபோல்டு, இரண்டு ‘ஐபோன் ஏர்’ மாடல்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைத்தாற்போல, மிகவும் மெல்லியதாகவும், அழகாகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும், இதன் விலை, மற்ற ஐபோன்களை விட மிக அதிகமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் 2026-ம் ஆண்டு, ஐபோன் 18 ப்ரோ மாடலுடன், இந்த ஐபோன் ஃபோல்டும் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், ஆப்பிளின் இந்த அடுத்த கட்டப் புரட்சிக்காக, ஒட்டுமொத்த டெக் உலகமும் ஆவலுடன் காத்திருக்கிறது.

Related News

Latest News