இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளில் Google Pay, PhonePe, Paytm போன்ற யுபிஐ செயலிகளின் பயன்பாடு கணிசமாக உயர்ந்துள்ளது. மக்கள் பணத்தை கையில் எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் குறைந்துள்ளது. கைப்பேசி இருந்தாலே எங்கிருந்தும் யாருக்குமானாலும் பணம் அனுப்பும் வசதி கிடைத்துள்ளது. எளிமையான பயன்பாடு காரணமாக முதியவர்களும் கூட யுபிஐ சேவைகளை அதிகமாக பயன்படுத்துகின்றனர்.
இந்த சூழலில், ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தனது “Apple Pay” சேவையை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இதற்காக ICICI Bank, HDFC Bank, Axis Bank போன்ற வங்கிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் Mastercard மற்றும் Visa போன்ற சர்வதேச கட்டண நிறுவனங்களுடனும் ஆலோசனை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.
இந்த ஆண்டின் இறுதிக்குள் இந்திய பயனர்களுக்காக இந்த சேவையை அறிமுகப்படுத்தும் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதுள்ள யுபிஐ செயலிகளை விட வேகமாகவும், மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடனும் பண பரிவர்த்தனை செய்யும் வகையில் இந்த சேவை வடிவமைக்கப்படுவதாக கூறப்படுகிறது.
தற்போது இந்திய யுபிஐ சந்தையில் Alphabet Inc. நிறுவனத்துக்கு சொந்தமான கூகுள் பே, Walmart நிறுவனத்தின் ஆதரவுடன் செயல்படும் போன் பே, Amazon நிறுவனத்தின் அமேசான் பே போன்ற வெளிநாட்டு நிறுவனங்களின் செயலிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதே நேரத்தில், பேடிஎம் மற்றும் பீம் யுபிஐ போன்ற உள்நாட்டு சேவைகளும் செயல்பட்டு வருகின்றன.
ஏற்கனவே அமெரிக்க நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தும் இந்திய யுபிஐ சந்தையில், தற்போது ஆப்பிளும் நுழையத் தயாராக இருப்பது டிஜிட்டல் கட்டண துறையில் போட்டியை மேலும் அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
