1976 ல் ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனத்தைத் தொடங்கியவர் ஸ்டீவ் ஜாப்ஸ்.
உடல்நலக் குறைவு காரணமாக 2011 ஆம் ஆண்டு மறைந்தார்.
அவர் பயன்படுத்திய பொருட்கள் தற்போது ஏலம் விடப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், வேலை வேண்டி அவர் விண்ணப்பித்த அப்ளிகேஷன்
இரண்டரை கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது அனைவரையும் ஆச்சரியப்பட
வைத்துள்ளது-
தனது 18 ஆவது வயதில் வேலைக்கு விண்ணப்பித்த அப்ளிகேஷன்
இரண்டரை கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. ஸ்டீவ் ஜாப்ஸ்
பூர்த்திசெய்துள்ள அந்த விண்ணப்பப் படிவத்தில் அவரது முகவரி,
போன் நம்பர், டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
வேலைக்காக வாழ்நாளில் அனுப்பிய ஒரே அப்ளிகேஷன் இது என்பதால்,
அந்நாட்டினர் மத்தியில் இதற்கு மிகுந்த முக்கியத்துவம் ஏற்பட்டது.
தற்போது விடப்பட்ட ஏலத்தில் அந்த விண்ணப்பப் படிவத்தை 3 லட்சத்து
45 ஆயிரம் டாலர் மதிப்புக்கு ஒருவர் எடுத்துள்ளார்.
இந்திய மதிப்பில் இதன் தொகை 2 கோடியே 54 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் ஆகும்.
கம்ப்யூட்டர் வல்லுநரும் சிறந்த பேச்சாளருமான ஸ்டீவ் ஜாப்ஸ் தனது
பத்து வருட உழைப்பின் பலனாக முதல் கம்ப்யூட்டரை உருவாக்கினார்.
பல்கலைக் கழகம் ஒன்றில் அவர் பேசியபோது, ”கஷ்டங்கள்தான்
உள்ளுணர்வையும் தன்னம்பிக்கையையும் வளர்த்தன. நான் அதிர்ஷ்டசாலி.
20 வயதிலேயே ஆப்பிள் நிறுவனத்தைத் தொடங்கினேன். அடுத்த 10 ஆண்டுகளில்
4 ஆயிரம்பேரை வேலைக்கு நியமித்தேன்” என்று பூரிப்புடன் கூறியிருந்தார்.
அத்துடன் தினமும் காலையில் எழுந்து கண்ணாடியில் முகம் பார்க்கும்போது,
”இன்று எனக்கு இறுதிநாள் என்று நினைத்துக்கொண்டு என் வேலைகளைத்
தொடங்குவேன். நமக்கு ஒதுக்கப்பட்ட நாள் குறைவு. அதை வீணாக்காதீர்கள்.
மற்றவர்கள் கூறிய கருத்துகளை வேத வாக்காகக்கொண்டு உங்கள் வாழ்க்கையை
நிர்ணயிக்காதீர்கள். உள்ளுணர்வுக்கு மதிப்பளியுங்கள்” என்று தனது அனுபவங்களை
மாணவர்களிடம் பகிர்ந்திருந்தார்.
வேலை கேட்டவரின் விண்ணப்பமே இரண்டரை கோடிக்கு விற்றுள்ளது
வியப்பாக இருக்கிறதல்லவா….