சிவகார்த்திகேயன் நடிப்பில், இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியுள்ள பராசக்தி திரைப்படம், வரவிருக்கும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. பரபரப்பான கதையம்சம் கொண்ட இந்த படம், தமிழகத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், படம் வெளியாகும் முன்பே ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
இந்நிலையில், பராசக்தி திரைப்படம் சென்சார் குழுவில் சில சிக்கல்களை எதிர்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. சமீபத்தில் படத்தை பார்த்த சென்சார் குழுவினர், சில முக்கிய காட்சிகள் குறித்து ஆட்சேபனை தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, இந்தி திணிப்பு தொடர்பான கருத்துகள் இடம்பெற்றுள்ள காட்சிகள் எதிர்காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்தக் கூடும் என்பதால், அவற்றை நீக்க வேண்டும் என்று சென்சார் குழு அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
ஆனால், அந்தக் காட்சிகள் படத்தின் முக்கிய தாக்கத்தை உருவாக்கும் வகையில் இருப்பதால், அவற்றை நீக்காமல் மறு தணிக்கைக்கு அனுப்ப படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
படம் வெளியாக இன்னும் ஓரிரு வாரங்களே உள்ள நிலையில், இந்த சென்சார் சிக்கல் சிவகார்த்திகேயன் ரசிகர்களிடையே சிறிய பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், மறு தணிக்கையில் பெரிய தடைகள் எதுவும் இருக்காது என்ற நம்பிக்கையே தற்போது நிலவுகிறது. விரைவில் பராசக்தி திரைப்படத்தின் சென்சார் அறிக்கை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
