Wednesday, January 15, 2025

எறும்புப் படகுகள்

வரிசை மாறாமல் ஒன்றன்பின் ஒன்றாக எறும்புகள் செல்வது
சர்வசாதாரணம். ஆனால், ஒரு கூட்டமாக ஒன்றோடொன்று
ஒட்டிக்கொண்டு கிட்டத்தட்ட ஒரு படகு அல்லது தட்டு மாதிரி செல்வது
அபூர்வமானது.

காடுகளிலிருக்கும் நெருப்பெறும்புகள் மழைக்காலங்களில்
வரும் வெள்ளப்பெருக்கிலிருந்து தப்பிக்கத்தான் இப்படி ஒரு
தந்திரத்தைக் கையாள்கின்றன.

சில வகை எறும்புகளுக்கு நீச்சல் தெரியுமாம். அவை தண்ணீருக்கு
மேல் மிதக்கும் தன்மையைக் கொண்டுள்ளன. அதேசமயம், மழையால்
எறும்புப் புற்றுகளில் நுழையும்போது அதில் வாழும் எறும்புகள் அனைத்தும்
ஒன்றுசேர்ந்து ஒரு தட்டுபோன்ற அமைப்பை உருவாக்கி, இவையனைத்தும்
படகுபோல மழைநீரில் மிதக்கின்றன.

மெதுவாக மிதந்து வந்து மற்றொரு தரைப்பகுதியையோ மரத்தையோ
பற்றி உயிரைக் காப்பாற்றிக்கொள்கின்றன.

நடுப்பகுதியில் ராணி எறும்பும், அதைச் சுற்றி சிறு வயது எறும்புகளும்,
ஓரத்தில் மற்ற வயதிலுள்ள எறும்புகளும் கூடியிருந்து தப்பிக்கின்றன.

நீரில் மிதந்து வரும்போது நிஜமான படகுக்கோ மீன்களுக்கோ
இரையாகாமல் தப்பிப்பதுதான் இவற்றின் பெரிய சவால்.

தமது வாழ்விடத்தைத் தமக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கும் இயல்பு,
தம்மைத் தாமே பாதுகாத்துக்கொள்ளும் திறன் போன்றவையே எறும்பு
களின் வெற்றிக்கு காரணமாக அமைகிறது.

எறும்புகளின் உடலில் சுவாச அமைப்பே கிடையாது. அதற்குப்
பதிலாக உடலைச் சுற்றி ஆக்ஸிஜனைக் கொண்டுசெல்ல
உதவும் சுவாச வழிகள் உள்ளன.

சாதாரண வகை எறும்புகள் 90 நாட்களும், கருப்பு எறும்புகள்
15 ஆண்டுகள் வரையும் வாழும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

Latest news