Thursday, May 8, 2025

RCBக்கு மேலுமொரு ‘அமில’ சோதனை காயத்தால் விலகிய ‘பேட்டைக்காரன்’

சுமார் 2 மாதங்களுக்கும் மேலாக நடைபெறும் தொடர் என்பதால், IPL உலகின் மிகப்பெரிய T20 தொடராக இருக்கிறது. பிரபலமான இந்திய வீரர்கள், வெளிநாட்டு வீரர்களுக்கு மட்டுமின்றி வளரும் வீரர்களுக்கும் வாய்ப்பு கொடுப்பதால் தான், 18வது ஆண்டிலும் கூட ரசிகர்கள் நெஞ்சில் IPL தனித்த இடத்தினை பெற்றுள்ளது.

கோடை திருவிழா போல நடைபெறும் இந்த தொடரில், ஏகப்பட்ட பக்க விளைவுகளும் இருக்கின்றன. குறிப்பாக வீரர்கள் பிட்னெஸ் இல்லாமல் தொடரின் பாதியில் விலகுவது, அடிக்கடி நடைபெறுகிறது. இதேபோல கோடிகளை கொட்டி வாங்கப்படும் வெளிநாட்டு வீரர்கள், அணியை கரை சேர்க்காமல் இடையிலேயே கழண்டு கொள்கின்றனர்.

இதனால் Play Off போன்ற போட்டிகளில் முக்கிய வீரர்கள் இல்லாமல் அணிகள் திண்டாடுவது வாடிக்கையாகி வருகிறது. IPL தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் இந்த வேளையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ராஜஸ்தான் ராயல்ஸ் இரு அணிகளும், தங்களது முக்கிய வீரரை இழந்து நிற்கின்றன.

ஏற்கனவே சஞ்சு சாம்சன் இல்லாமல் ராஜஸ்தான் அவதிப்பட்டு வரும் நிலையில், மற்றொரு இடியாக நிதிஷ் ராணாவும் அணியில் இருந்து விலகி இருக்கிறார். அவருக்குப் பதிலாக ராஜஸ்தான் தற்போது, 19 வயது தென் ஆப்பிரிக்க விக்கெட் கீப்பர் Lhuan-dre Pretorius ஐ, ரூபாய் 30 லட்சம் கொடுத்து எடுத்துள்ளது.

இதேபோல Play Off ரேஸில் முன்னணியில் இருக்கும் பெங்களூரு அணி, ஒன் டவுனில் எதிரணி பவுலர்களுக்கு தண்ணி காட்டிய தேவ்தத் படிக்கலை இழந்துள்ளது. காயம் காரணமாக படிக்கல் விலக அவருக்குப் பதிலாக, மயங்க் அகர்வாலை ரூபாய் 1 கோடிக்கு RCB ஒப்பந்தம் செய்துள்ளது.

இதேபோல சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஆடம் ஜம்பாவையும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கிளென் மேக்ஸ்வெலையும், குஜராத் டைட்டன்ஸ் அணி காகிசோ ரபடாவையும் இழந்து நிற்பது குறிப்பிடத்தக்கது. 

Latest news