பாமக மற்றும் வன்னியா் சங்கம் சார்பில் சித்திரை முழு நிலவு வன்னிய இளைஞர் மாநாடு கடந்த 11-ந்தேதி மாமல்லபுரத்தில் நடைபெற்றது. இதில் டாக்டர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஒன்றாக பங்கேற்றனர். மாநாட்டில் டாக்டர் ராமதாசின் பேச்சுக்கு கட்சிக்குள்ளேயே எதிர்ப்புகள் எழுந்தன.
இந்நிலையில் நேற்று திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைவர்களுக்கான ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அழைப்பு விடுத்து இருந்தார்.
இந்த கூட்டத்தை பாமக தலைவரான டாக்டர் அன்புமணி ராமதாஸ் உட்பட பலரும் புறக்கணித்தனர். இது கட்சியின் மூத்த நிர்வாகிகளிடையே அதிர்ச்சியையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியது.
இந்தநிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்காமல் 2வது நாளாக அக்கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் புறக்கணித்துள்ளார்.
இது குறித்து அக்கட்சியின் கவுரவத்தலைவர் ஜி.கே.மணி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- ராமதாஸ், அன்புமணி இடையேயான பிரச்சினையை தீர்க்க இரவு பகலாக முயற்சிக்கிறேன். ராமதாஸ் – அன்புமணி இருவரும் விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு உள்ளது. கட்சிக்குள் சலசலப்பு வருவது இயல்புதான். இது விரைவில் சரியாகும் என கூறியுள்ளார்.