அமெரிக்காவின் ‘THAAD’ பாதுகாப்பு கவசம் தோல்வி! ஈரானால் கருகிப்போன 142 பில்லியன் டாலர்!

மத்திய கிழக்கு நாடுகளைப் பாதுகாக்க, அமெரிக்கா கொடுத்த மிகப்பெரிய வாக்குறுதிதான் அந்த ‘THAAD’ மற்றும் ‘பேட்ரியாட்’ ஏவுகணை அமைப்புகள். இதற்காக வளைகுடா நாடுகள் பல பில்லியன் டாலர்களைச் செலவழித்தன. ஆனால், நிஜப் போர் வந்தபோது, அமெரிக்காவின் இந்தக் கோட்டை சுக்குநூறாக உடைந்துவிட்டது.

கடந்த மே மாதம் அமெரிக்க அதிபர் டிரம்ப், சவுதி அரேபியாவுடன் சுமார் 142 பில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ ஒப்பந்தத்தைச் செய்தார். ஈரானின் அச்சுறுத்தலில் இருந்து பாதுகாக்க இதுவே உலகத்தரம் வாய்ந்த கவசம் என்று அமெரிக்கா அப்போது கூறியிருந்தது.

ஆனால், ஈரான் நடத்திய தாக்குதலில் அமெரிக்காவின் இந்தக் கவசங்கள் வெறும் காகிதமாகப் போய்விட்டன. ஏவுகணைகளின் வேகத்தையும், மலிவான ட்ரோன்களின் எண்ணிக்கையையும் அமெரிக்காவின் பாதுகாப்பு அமைப்புகளால் எதிர்கொள்ள முடியவில்லை.

முக்கியமாக, இந்த ஏவுகணை அமைப்புகளின் கண்களாகக் கருதப்படும் THAAD ரேடார்களை ஈரான் துல்லியமாகத் தாக்கி அழித்தது. சவுதி அரேபியா, ஜோர்டான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்த ரேடார் தளங்கள் அனைத்தும், தாக்குதலுக்குப் பிறகு கருகிய இரும்புக்கூடுகளாகக் காட்சியளிக்கும் செயற்கைக்கோள் படங்கள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

ஈரானின் மலிவான ட்ரோன்களை வீழ்த்த அமெரிக்கா பயன்படுத்தும் ஒரு ஏவுகணையின் விலை, பல மில்லியன் டாலர்கள். இந்த ‘செலவு வேறுபாடு’தான் அமெரிக்காவுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. ஈரானின் தாக்குதல்களைச் சமாளிக்க அமெரிக்காவிடம் போதிய ஏவுகணைகள் இல்லை.

இதனால், தென் கொரியாவில் இருந்த ஏவுகணைகளைக்கூட அமெரிக்கா மத்திய கிழக்குக்கு அவசரமாக இடமாற்றம் செய்தது. ஆனால், இதுவும் போதிய பலனைத் தரவில்லை. பல பில்லியன் டாலர்களைக் கொட்டி வாங்கிய பாதுகாப்பு கவசம் இவ்வளவு பலவீனமானதா என்ற கேள்வி இப்போது வளைகுடா நாடுகளிடையே எழுந்துள்ளது. அமெரிக்காவை மட்டுமே நம்பியிருந்த அந்த நாடுகள், இப்போது பாதுகாப்புக்காகத் தங்களின் வியூகங்களை மாற்றிக்கொள்ளத் தொடங்கியுள்ளன. சீனாவை நோக்கித் தங்களின் இராஜதந்திரத்தை மாற்றியிருக்கும் வளைகுடா நாடுகள், இனி வெறும் அமெரிக்க ஆயுதங்களை மட்டும் நம்பியிருக்கப் போவதில்லை என்பதைத்தான் இந்தத் தோல்வி நமக்கு உணர்த்துகிறது.

Related News

Latest News