மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஈரானின் பொருளாதார முதுகெலும்பாக விளங்கும் எண்ணெய் துறை மீது அமெரிக்கா தனது பிடியை மேலும் இறுக்கியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம், ஈரானின் கடல்வழி வர்த்தகத்தை முழுமையாக முடக்கும் வகையில் ஈரானிய துறைமுகங்களை ராணுவ ரீதியாக முற்றுகையிட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, ஈரானிய எண்ணெய் ஏற்றுமதியை ரகசியமாக முன்னெடுத்து வந்த மிகப்பெரிய நிறுவனங்கள் மற்றும் கப்பல்கள் மீது தற்போது புதிய தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, ஈரானின் உயர்மட்ட பாதுகாப்பு ஆலோசகராக இருந்து, கடந்த பிப்ரவரி மாதம் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்ட அலி சம்கானியின் மகன், முகமது ஹொசைன் சம்கானிக்குச் சொந்தமான கப்பல் போக்குவரத்து வலையமைப்பை அமெரிக்கா குறிவைத்துள்ளது.
இந்த வலையமைப்பின் கீழ் செயல்படும் 24-க்கும் மேற்பட்ட நபர்கள், நிறுவனங்கள் மற்றும் கப்பல்கள் மீது அமெரிக்க கருவூலத்துறை அதிரடித் தடைகளை அறிவித்துள்ளது. ஈரானிய மக்கள் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்படும் நிலையில், அந்நாட்டின் மேல்தட்டு வர்க்கத்தினர் சட்டவிரோத வர்த்தகத்தின் மூலம் லாபம் ஈட்டுவதைத் தடுப்பதே தங்களின் நோக்கம் என அமெரிக்க கருவூலச் செயலர் ஸ்காட் பெசென்ட் தெரிவித்துள்ளார்.
இந்தத் தடைகளுக்குப் பின்னால் மற்றொரு அதிர்ச்சிகரமான தகவலையும் அமெரிக்கா வெளியிட்டுள்ளது. ஈரானிய எண்ணெய் விற்பனை செய்யப்பட்டு, அதற்குப் பதிலாக வெனிசுலாவிடமிருந்து தங்கம் பெறப்பட்டதாகவும், இதில் ஹிஸ்புல்லா போன்ற அமைப்புகளுக்கு நிதி உதவி வழங்கப்பட்டதாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
சையத் நைமேயி பத்ருதீன் மூசாவி என்பவர் தலைமையில் நடந்த இந்த பணமோசடி திட்டத்தில் தொடர்புடைய நிறுவனங்கள் மீதும் தற்போது தடை பாய்ந்துள்ளது. ஒருபுறம் அமெரிக்கா கடல்வழி முற்றுகையைத் தீவிரப்படுத்த, மறுபுறம் உலக கச்சா எண்ணெய் விநியோகத்தின் முக்கிய பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடி வைத்துள்ளது.
ஏற்கனவே போரினால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், கடலில் இருக்கும் ஈரானிய எண்ணெயை விற்க வழங்கப்பட்ட தற்காலிகச் சலுகைகளையும் நீட்டிக்க அமெரிக்கா மறுத்துவிட்டது.
அமெரிக்காவின் இந்த ‘எகனாமிக் ஃபியூரி’ எனப்படும் பொருளாதார ஆவேச நடவடிக்கை, ஈரான் தனது வருவாயைப் பெருக்குவதைத் தடுப்பதோடு, சர்வதேச அரங்கில் அந்நாட்டைத் தனிமைப்படுத்தும் முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது. வர்த்தகப் போராகத் தொடங்கி, இப்போது ஒரு நேரடி மோதல் களமாக மாறியுள்ள இந்தச் சூழல், உலகப் பொருளாதாரத்தில் இன்னும் எந்த மாதிரியான தாக்கங்களை ஏற்படுத்தும் என்ற அச்சம் சர்வதேச நாடுகள் இடையே மேலோங்கியுள்ளது.
