Thursday, May 29, 2025

சரிவை நோக்கி நகரும் அமெரிக்கா! டிரம்ப் முடிவால் உலக அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் பொருளாதார மந்த நிலை! இந்தியாவின் கதி?

அமெரிக்க அதிபர் டிரம்ப் தான் சொன்னபடியே ஆரம்பித்துள்ள உள்ள வர்த்தக போரின் எதிரொலியாக உலக அளவில் பங்குச்சந்தைகள் சரிவை நோக்கி நகரத் தொடங்கி உள்ளன. ஏற்கனவே அமெரிக்க அதிபர் டிரம்ப் நடவடிக்கையால் இந்த வருடம் அமெரிக்காவில் பொருளாதார மந்தநிலை தொடங்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பரஸ்பர வரிவிதிப்பால், 2வது நாளாக அமெரிக்க பங்குச்சந்தை கடும் வீழ்ச்சியை சந்தித்து DOW JONES பங்குச்சந்தையில் 2000 புள்ளிகள் சரிந்ததால், முதலீட்டாளர்களுக்கு பல லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளது.

இதன் காரணமாக இந்தியாவிலும் பங்குச்சந்தை வீழ்ச்சி அடைந்து நேற்று ஒரே நாளில் முதலீட்டாளர்களுக்கு ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். கடந்த 4 மாதங்களில் மட்டும் டிரம்பின் அதிரடியான முடிவுகளால் அந்நாட்டு பங்கு சந்தை 10 ட்ரில்லியன் டாலரை பறிகொடுத்திருப்பதோடு நேற்று ஒரே நாளில் ரூ.176 லட்சம் கோடி / அமெரிக்க வர்த்தகத்தில் வீழ்ச்சியடைந்துள்ளது.  தொடர்ந்து டிரம்ப் விதித்த வரி காரணமாக சரிவை சந்திக்காத துறையே இல்லை என்றாகிவிட்டது.

அமெரிக்க பங்குச்சந்தை நாள்தோறும் 200 புள்ளிகள் வரை சரிந்து அதன் தாக்கம் மும்பை பங்குச்சந்தையையும் ஒரு கை பார்க்கிறது. யோசித்து பார்க்க முடியாத அளவிற்கு மார்க்கெட் தொடர்ந்து ஆட்டம் கண்டு வருவதை பார்க்க முடிகிறது.

புதிய பதிலடி வரி விதிப்பினால் ஐரோப்பிய ஒன்றியம் 20 சதவீத விகிதத்தையும் சீனா 34 சதவீத வரியையும் சந்திக்கிறது. இந்தியா 26 சதவீதம், தென் கொரியா 25 சதவீதம் மற்றும் ஜப்பான் 24 சதவீதமும் வரி விதிக்கப்படும். அதிகபட்சமாக கம்போடியா மீது 49%, வியட்நாம் மீது 46%, இலங்கை மீது 44% வரி விதிக்கப்பட்டு உள்ளது. சீனா மீது 34%, ஐரோப்பிய ஒன்றியம் மீது 20%, ஜப்பான் மீது 24% வரிகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அமெரிக்க அதிபர் டிரம்ப்-பே பொருளாதார விஷயங்களில் கைதேர்ந்தவர் என்று அறியப்படுகிறார். இந்நிலையில் “மார்க்கெட் சரிவது பெரிய விஷயம் அல்ல. மார்க்கெட் இனி உயரும். எதிர்பார்க்காத மிகப்பெரிய உயரத்தை மார்க்கெட் அடைய போகிறது. மார்க்கெட் சர்ரென புதிய உச்சத்தை அடையும்” என்று டிரம்ப் கூறி உலக வர்த்தகர்களின் கவனத்தை ஈர்த்தாலும் அவர் கூறியதற்கு எதிர்மாறாக மார்க்கெட் மளமளவென நிலைகுலைய தொடங்கியிருப்பது அதிர்ச்சியே. மேலும் 10% அடிப்படை வரி உலகம் முழுக்க உள்ள எல்லா நாடுகள் மீதும் விதிக்கப்பட்டிருப்பது வர்த்தக ஸ்திரத்தன்மையை பாதித்து பொருளாதார மந்தநிலைக்கு வழி வகுத்துவிடும் என்றும் அஞ்சப்படுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news