மோதிக்கொள்ளும் அமெரிக்கா – சீனா! ‘இரட்டை வேடம் போடுகிறது…!’ குற்றச்சாட்டுகளை அள்ளி வீசும் சீனா!

அமெரிக்கா சீன பொருட்களுக்கு விதிக்கும் வரிகள் தீவிரமாக உயர்ந்துள்ள நிலையில், அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சமீபத்தில் எச்சரிக்கை விடுத்தார். அதன் படி, நவம்பர் 1 முதல் சில பொருட்களுக்கு கூடுதல் 100 சதவீத வரி விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளனர். தற்போது அமெரிக்க அரசு சில பொருட்களுக்கு ஏற்கனவே 30 சதவீத வரி விதித்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்; இதற்கு காரணமாக சீனா அரிய வகை தனிமங்கள் மற்றும் முக்கிய உற்பத்தி பொருட்களை வழங்க மறுக்கிறது என்பதைக் கூறியுள்ளார்.

இதுபோன்ற நடவடிக்கைகள் குறித்து சீன வர்த்தகத் துறையின் மூத்த அதிகாரி பெய்ஜிங்கில் நிருபர்களிடம் விளக்கம் அளித்தார். அவர் தெரிவிப்பது என்னவென்றால், ‘அமெரிக்கா செமிகண்டக்டர், சிப் போன்ற சுமார் 3,000 வகையான சீன பொருட்களுக்கு தடை விதித்துள்ளது. அதே நேரத்தில், சீனாவை பொறுத்தவரை சுமார் 900 பொருட்களுக்கு மட்டுமே தடை விதித்து இருக்கிறோம் என்று அவர் கூறினார். அமெரிக்காவின் போக்கு சீன நிறுவனங்களுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளன என்றும் அவர் உறுதியாக கூறினார்.

மேலும், அமெரிக்காவின் வரிவிதிப்பு வாயிலாக தொடரும் மிரட்டலுக்கு சீனா அஞ்சாது என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் வர்த்தக போரை சீனா விரும்பவில்லை. அமெரிக்க அரசு தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும். இல்லையெனில் சீனாவை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்போம் என்றும் அவர் எச்சரித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், கடந்த காலங்களில் வரிவிதிப்பு விவகாரத்தில் அமெரிக்கா இரட்டை வேடம் போடுவதாகவும் இதேபோல வணிக கப்பல் போக்குவரத்தில் அமெரிக்கா தொடர்ந்து ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருவதாகவும் கடுமையாக சாடியுள்ளார்.

Related News

Latest News