ஏப்ரல் 4ம் தேதி உத்தர பிரதேசத்தின், Ekana மைதானத்தில் நடைபெற்ற மும்பை-லக்னோ போட்டி, இறுதிவரையிலுமே வெற்றிவாய்ப்பை கணிக்க முடியாமலே சென்றது. கடைசி வரையிலும் போராடிய மும்பையால், லக்னோவை வீழ்த்த முடியவில்லை.
முடிவில் 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவி, அதிர்ச்சி அளித்தது. இது அந்த அணியின் 3வது தோல்வியாகும். இதனால் புள்ளிப்பட்டியலில் தற்போது 7வது இடத்தில், ‘வாழ்ந்து கெட்ட குடும்பம் போல’ மும்பை காட்சி அளிக்கிறது.
டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வு செய்த கேப்டன் ஹர்திக் பாண்டியா, அட்டகாசமாக பந்துவீசி 5 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். ஆனால் பேட்டிங்கில் கோட்டை விட்டுவிட்டார். நன்றாக ஆடிக்கொண்டிருந்த திலக் வர்மாவை, Retired Hurt முறையில் வெளியேற்றியது.
மற்றும் கடைசி ஓவரில் சிங்கிள் எடுக்க மறுத்து, எப்படியும் வெற்றி பெற்று விடலாம் என்ற ஓவர் நம்பிக்கையுடன், ஹர்திக் இருந்தது தான் இந்த தோல்விக்குக் காரணம். பவர் ஹிட்டரான திலக்கை பாதியில் வெளியேற்றியது, உரிமையாளர் ஆகாஷ் அம்பானிக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி விட்டதாம்.
இதனால் மேட்ச் முடிந்த உடன் மைதானத்தில் வைத்தே, ஹர்திக் பாண்டியாவை கடுமையாகப் பேசியுள்ளார். மும்பை IPL கோப்பையை வென்று, 4 ஆண்டுகள் ஆகிவிட்டன. ரோஹித் தலைமையில் அணி ஜொலிக்கவில்லை என்பதால் தான், குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்த ஹர்திக்கை பெரும்தொகை கொடுத்து MI வாங்கியது.
ஆனால் சாம்பியன்ஸ் டிராபியில் ஜொலித்த ஹர்திக், IPL தொடரில் தொடர்ந்து சொதப்புகிறார். எனவே சூர்யகுமார் யாதவ் அல்லது திலக் வர்மா இருவரில் ஒருவரை, அணிக்கு கேப்டனாக்கி விடலாமா? என்று ஆகாஷ் அம்பானி, தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு இருக்கிறாராம்.
இதனால் ஹர்திக்கின் கேப்டன் பதவி தற்போது கேள்விக்குறி ஆகியுள்ளது. முன்னதாக லக்னோ உரிமையாளர் கோயங்கா, தோல்விக்கு பிறகு கேப்டன் ரிஷப் பண்டினை மைதானத்தில் வைத்தே, கடுமையாகத் திட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.