ஆக்டோபஸ், கணவாய், சிப்பி போன்ற கடல் உயிரினங்கள் குறித்து ஆராய்ச்சி செய்யும் ‘தி ஆக்டோபஸ் நியூஸ் மாகசின் ஆன்லைன் அதாவது TONMO” என்ற இணைய தளம், 2007 அக்டோபர் 8 ஆம் தேதி முதன்முதலில் உலக ஆக்டோபஸ் தினத்தை அறிவித்தது. அதன் பின், ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 8ஆம் தேதி உலகம் முழுவதும் ஆக்டோபஸ் தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் நேற்று உலக ஆக்டோபஸ் தினம் கடைபிடிக்கப்பட்டது.
ஆக்டோபஸ்களுக்கு எட்டு உணர்ச்சி கொடுக்குகள் உள்ளன. அதில் இரண்டு ‘கால்கள்’, ஆறு ‘கைகள்’ என பிரிக்கப்பட்டுள்ளது. இதனால் தான் எண் எட்டு குறிக்கும் அக்டோபர் 8ம் தேதி சிறப்பு நாளாக அறிவிக்கப்பட்டது. உலகளவில் சுமார் 300க்கும் மேற்பட்ட ஆக்டோபஸ் இனங்கள் உள்ளன. அவை பெரும்பாலும் கடலில் வாழ்ந்து, நண்டுகள் மற்றும் இறால்களை உணவாக எடுத்துக்கொள்கின்றன.
பசிபிக் பெருங்கடலில் வாழும் ராட்சத ஆக்டோபஸ், உலகிலேயே மிகப்பெரியதாகக் கருதப்படுகிறது. இது 16 அடி நீளமும், 50 கிலோ எடையும் வளரக்கூடியது. மிமிக்கஸ் ஆக்டோபஸ் ஆபத்தை உணரும்போது நிறத்தை மாற்றிக் கொள்ளும் திறன் உடையது. அதே வேளை, நீல வளையம் கொண்ட ஆக்டோபஸ் மிகவும் விஷத் தன்மை மிகுந்த இனமாகும்.
ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, ஆக்டோபஸ்களுக்கு குறுகிய மற்றும் நீண்டகால நினைவாற்றல் உள்ளது. மனிதர்களையும் அவை அடையாளம் காண முடியும். பொதுவாக கடுஞ்சிவப்பு நிறத்தில் காணப்படும் இவை, ஓய்வில் பிங்க் நிறமாக மாறுகின்றன.
ஆக்டோபஸ்களுக்கு மூன்று இதயம், நீல நிற இரத்தம் மற்றும் டோனட் வடிவ மூளை உள்ளது. அவற்றின் விஷத்தில் டெட்ரோடோட்டாக்சின் போன்ற நச்சுகள் காணப்படுகின்றன. இது மனிதர்களில் பார்வை இழப்பு, மூச்சுத் திணறல், இதய பாதிப்பு போன்ற தீவிர பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும்.
பெண் ஆக்டோபஸ் 4 லட்சம் முட்டைகள் இடும். அவற்றை ஐந்து மாதங்கள் பாதுகாக்கும். பெரும்பாலானவை, முட்டைகள் பொரிந்த பின் சில நாட்களே உயிர்வாழுகின்றன என்பது ஆச்சரியமான தகவலாக இருக்கிறது.