வளசரவாக்கம் பகுதியில் தவெகவிலிருந்து திமுகவில் இணைந்த இளைஞர் மீது கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், தன் மீதான விமர்சனங்களுக்கு ஆதாரத்துடன் பாதிக்கப்பட்ட இளைஞர் பேட்டி அளித்துள்ளார்.
அதாவது, சென்னை வளசரவாக்கம் மண்டலம் 152 ஆவது வார்டு பகுதியை சேர்ந்த சமீர் என்ற தவெக முன்னாள் தொண்டர் 20க்கும் மேற்பட்ட தவெக கட்சியினருடன் இணைந்து கடந்த 16ஆம் தேதி மதுரவாயல் எம்எல்ஏ காரம்பாக்கம் கணபதி முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
அதன் பின்னர் சமீர் திமுகவிலிருந்து திமுகவில் மீண்டும் இணைந்துள்ளதாக, அவர் எம்எல்ஏ பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறி போஸ்டர் அடித்திருப்பதையும் பகிர்ந்து தவெக சார்பில் சமூக வலைதளத்தில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
அதுமட்டுமின்றி சமீர் மேடையில் நடனம் ஆடிக்கொண்டு ஒரு பெண்ணுக்கு முத்தமிடும் காட்சிகளும் வைரலாக பரவின. இதுபோன்ற ஒழுக்கம் கெட்ட ஒருவர் திமுகவில் இருந்து கொண்டே மீண்டும் திமுகவில் இணைந்துவிட்டு, தவெகவில் இணைந்ததாக போய் தகவலை பரப்புவதாகவும் குற்றச்சாட்டுகளை தவெக சார்பில் சமூக வலைதளத்தில் முன்வைத்தனர்.
இதுதொடர்பாக இன்று வளசரவாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்த சமீர், தான் கடந்த இரண்டு ஆண்டுகளாக தவெகவில் இருந்ததற்கான ஆதாரங்களை காண்பித்தார். அம்பத்தூர் தவெக மாவட்டச் செயலாளர் பாலமுருகன் கட்சியில் இணைந்த போது எடுத்த புகைப்படம் படம், களத்தில் பணியாற்றிய போது எடுத்த புகைப்படம், நிகழ்ச்சிகளின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ஆகியவற்றை காண்பித்தார்.
மதுரவாயல் எம்எல்ஏவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து போஸ்டர் அடிக்கப்பட்ட அதே தினத்தில்தான் திமுகவில் சேர்ந்ததாகவும், திமுகவில் இணைவதற்காக அடிக்கப்பட்ட போஸ்டர் தான் அது எனவும் தெரிவித்தார். ஆனால் அந்த போஸ்டரை பகிர்ந்து தன் மீது தவெகவினர் வீண் பழி சுமத்துவதாகவும் கூறினார்.
மேலும், மேடையில் தன்னுடன் நடனமாடி முத்தமிடும் பெண் தனது மனைவி என்றும், தாங்கள் இருவரும் மேடையில் ஆடக்கூடிய நடன கலைஞர்கள் எனவும் தெரிவித்தார். ஆனால் அதனை தவறாக சித்தரித்து அவதூறு பரப்புவதாகவும் இதனால் தான் மன உளைச்சல் அடைந்திருப்பதாகவும், தவெக விலகியதற்காக இவ்வளவு கீழ்த்தரமான விமர்சனங்களை தவெகவினர் முன்வைப்பார்கள் என்று தான் எதிர்பார்க்கவில்லை எனவும் கவலை தெரிவித்தார். இதை தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளோம், காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என கூறினார்.
