மக்கள் தங்களது தேவைகளுக்கு வெளியே வேண்டுமானால் ஓலா, ஊபர் போன்ற டாக்ஸிகள் பயனப்டுத்தி வருகின்றனர். நினைத்த இடத்திற்கு, நினைத்த நேரத்தில் செல்லமுடியும் என்ற வசதி இந்த டாக்ஸியில் கிடைப்பதால், இதற்கு பேராதரவு கிடைத்துவருகிறது. ஆனால், பயண தூரத்திற்கு, நிரந்தர கட்டணம் இல்லை என்பதால், தேவை அதிகமாக இருக்கும் நேரங்களில், பல மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால், பயணியர் பாதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், பயணிகள் குறைந்த கட்டணத்தில் பயணம் செய்யும் வகையில் பாரத் டாக்ஸி உருவாக்கப்பட்டுள்ளது. நாடு முழுதும் ஒரே செயலியில் பதிவு செய்து, குறைந்த கட்டணத்தில், பொதுமக்கள் பயணிக்க வசதியாகவே இந்த பாரத் டாக்ஸி உருவாக்கப் பட்டுள்ளது.
இந்நிலையில், ஹரியானா மாநிலம், பஞ்ச்குலாவில் நடைபெற்ற கூட்டுறவு மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார். அப்போது, கூட்டுறவு அமைச்சகத்தின் மூலம் விரைவில் ‘பாரத் டாக்ஸி’ என்ற புதிய முயற்சி தொடங்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்தத் திட்டத்தின் மூலம் கிடைக்கும் லாபம் முழுவதும் ஓட்டுநர்களுக்கே வழங்கப்படும் என்றும், இது வாடிக்கையாளர்களுக்கான வசதியை மேம்படுத்துவதோடு, ஓட்டுநர்களின் வருமானத்தையும் உயர்த்தும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
ஓலா–உபர் போன்ற தனியார் டாக்சி சேவைகளுக்கு மாற்றாக, குறைந்த கட்டணத்தில் சேவை வழங்கும் திட்டமாக இது இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
