அது 1986ம் ஆண்டு ஆகஸ்ட் 21ம் தேதி. மேற்கு ஆப்பிரிக்காவின் கேமரூன் நாட்டில் உள்ள நியோஸ் ஏரியில் நடந்த கொடூரமான பேரழிவு உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அன்றிரவு நியோஸ் ஏரியைச் சுற்றிய நான்கு கிராமங்களில் 1700க்கும் மேற்பட்ட மக்கள் மற்றும் 3500க்கும் மேற்பட்ட கால்நடைகள் மூச்சுத்திணறி உயிரிழந்தனர். குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் ஒரே இரவில் உயிரிழந்தது உலகளவில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆரம்பத்தில் காரணம் புரியாமல் பலரும் குழம்பினர். சிலர் பேய், பிசாசு சம்பவம் எனக் கூறினர். ஆனால் பின்னர் விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் உண்மையான காரணம் கண்டறியப்பட்டது. அது லிம்னிக் வெடிப்பு எனப்படும் அரிய இயற்கை நிகழ்வு. ஆழமான ஏரிகளில் நீண்ட காலமாக கார்பன் டை ஆக்சைடு வாயு சேமிக்கப்படும். அப்போது நிலச்சரிவு, எரிமலை அதிர்வு அல்லது கனமழை போன்ற காரணங்களால் அந்த வாயு திடீரென வெளியேறியது.
காற்றை விட கனமாக இருந்த கார்பன் டை ஆக்சைடு, மேகமாக பரவி அருகிலிருந்த கிராமங்களில் சுவாசிக்க வேண்டிய ஆக்சிஜனை தடுத்து விட்டது. இதனால் மக்கள் மற்றும் விலங்குகள் அனைவரும் ஒரே நேரத்தில் மூச்சுத்திணறி உயிரிழந்தனர். இரவு நேரம் என்பதால் மணிக்கு 20-50 கி.மீ. வேகத்தில் பரவிய அந்த வாயுவிலிருந்து, யாரும் தப்பிக்க முடியவில்லை.
இந்த பேரழிவுக்குப் பிறகு, மீண்டும் இதுபோன்று நிகழாமல் தடுக்கும் வகையில் ஏரியில் குழாய்கள் நிறுவப்பட்டு, கார்பன் டை ஆக்சைடு கட்டுப்படுத்தப்பட்ட முறையில் மெதுவாக வெளியேற்றப்படுகிறது. 2011இல் கூடுதல் குழாய்களும் அமைக்கப்பட்டன. நியோஸ் ஏரி பேரழிவு, இயற்கை பேரிடர்களை எப்போதும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதற்கான வரலாற்றுச் சான்றாக திகழ்கிறது.
