Wednesday, June 18, 2025

”யாராலயும் தடுக்க முடியாது” கொம்பனை களமிறக்கிய ஈரான் – விழிபிதுங்கி நிற்கும் இஸ்ரேல்

ஈரான் அணுகுண்டு தயாரிப்பில் ஈடுபடுவதாக கூறி இஸ்ரேல், அந்நாட்டின் மீது தாக்குதல் தொடுத்துள்ளது. பதிலுக்கு ஈரானும் ஏவுகணைகள் மூலம் பதில் தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால் மத்திய கிழக்கு நாடுகள் மட்டுமின்றி, உலக நாடுகளும் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

ஈரானின் மதகுருவும், சக்திவாய்ந்த அரசியல் தலைவருமான கொமெனியை கொல்வது தான் தங்களின் திட்டம் என்று, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வெளிப்படையாக பேசியுள்ளார். இந்தநிலையில் தங்களின் கைவசம் சக்திவாய்ந்த ஹைப்பர்சோனிக் ஏவுகணை இருப்பதாக ஈரான் அறிவித்துள்ளது

ஈரான் ஏவிய ராக்கெட்கள், ஏவுகணைகளை வானிலேயே இடைமறித்து சுட்டு வீழ்த்திய இஸ்ரேலால் ஹைப்பர்சோனிக்கை தடுக்க முடியவில்லை. இஸ்ரேலின் சக்தி வாய்ந்த ஐயன் டாம் வான் பாதுகாப்பு அமைப்பால் கூட ஹைப்பர்சோனிக்கை தடுத்து நிறுத்த முடியவில்லை.

ஒலியைவிட 5 மடங்கு வேகத்தில் பறக்கும் திறன் கொண்ட இந்த ஹைப்பர்சோனிக்கை பயன்படுத்தி, இஸ்ரேலின் பல்வேறு பகுதிகளை தாக்கியதாக, ஈரானின் புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது. இதற்கிடையே, ”இஸ்ரேல் மீது கருணை காட்ட வேண்டாம்” என்று கொமெனியும், தன் பங்குக்கு முழங்கி இருக்கிறார்.

ஈரானின் முதல் ஹைப்பர்சோனிக் ஏவுகணையான Fattah-1 கடந்த 2023ம் ஆண்டு பயன்பாட்டுக்கு வந்தது. இஸ்ரேலின் அயன் டோம் மற்றும் அம்புகள் போன்ற, மிகவும் மேம்பட்ட பாதுகாப்பு ஏவுகணைகளை கூட கடந்து செல்லும் வகையில், இந்த ஹைப்பர்சோனிக் ஏவுகணையை ஈரான் வடிவமைத்துள்ளது.

12 மீட்டர் நீளம் கொண்ட இந்த ஏவுகணை 1400 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லக்கூடியது. 200 கிலோ வரையிலான வெடிபொருட்களை சுமந்து செல்லும் திறன் உடையது. மணிக்கு 17 ஆயிரத்து 900 கிலோ மீட்டர் வேகத்தில் இந்த ஏவுகணையால் பயணிக்க முடியும். இடையில் எதிரி நாட்டு ஏவுகணைகள் வழிமறித்தால், இதனால் தன்னுடைய திசையை மாற்றிக்கொள்ள முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா உதவியுடன் ஈரான் மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் கூட, இந்த ஏவுகணைகளை தடுப்பதில் தோல்வி அடைந்துள்ளது. இதனால் ஈரானின் இந்த சக்திவாய்ந்த ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை, இடைமறித்து தாக்கும் திறன் உலகின் எந்த நாட்டிடமாவது இருக்கிறதா? என்னும் கேள்வி எழுந்துள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news