“ஏலியன் இங்க இருக்கு அங்க இருக்குன்னு சொல்லி இப்ப நம்மள ரொம்ப நெருங்கி வந்துடுச்சு போலிருக்கே…” இப்படி பேசிக்கொண்டிருப்பது நம்ம கரூர் வாசிகள் தான். உண்மைதான்… கரூரில் இரவு நேரத்தில் வானில் தோன்றும் மர்ம ஒளி. அங்கும், இங்குமாக வட்டமிடும் அதிர்ச்சி. “இது கண்டிப்பா ஏலியன் தான்” என்று அடித்து கூறும் ஒரு சிலர். இவை தான் பூமிக்கு அருகில் ஏலியன்கள் வருகையா என பொதுமக்களை குழப்பத்துக்குள் தள்ளியிருக்கிறது. மேலும் இதுதொடர்பாக தகுந்த விளக்கம் அளிக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ள நிலையில், தற்போது மர்ம ஒளி தெரிந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
நேற்று கரூர் மாவட்டத்தில் இரவு நேரத்தில் வானில் இடி, மின்னல் என வெளுத்து வாங்கிக்கொண்டிருந்தபோது தான் அந்த சம்பவம் நடந்தது. திடீரென மேகக் கூட்டத்தில் இருந்து ஒரு மர்ம ஒளி ஒன்று மின்னி மறைந்து வட்டமடித்து செல்லும் காட்சிகள் வெளியாகி பொதுமக்களை அதிர்ச்சியில் உறையவைத்துவிட்டது.
இந்த மர்ம ஒளி, வெண்மை நிறமாகவும், சில நேரங்களில் மினுமினுப்பாகவும் காணப்பட்டதாகக் கூறப்பட்டதை தொடர்ந்து ஒருசிலர் இதை வெளிநாடுகளில் புகழ்பெற்ற “ஏலியன்களின் பறக்கும் தட்டு” என்று குறிப்பிடுகின்றனர். அதே சமயம், சிலர் இது பாகிஸ்தான் ட்ரோன் அல்லது ஏவுகணையாக இருக்கலாம் என்றும் பீதியடைந்துள்ளனர். குறிப்பாக இந்தியா – பாகிஸ்தான் இடையே நிலவும் போர் பதற்றம் காரணமாக இந்த மர்ம ஒளி தற்போது பேசுபொருளாகியுள்ளது.
அதே நேரத்தில் திருவிழா அல்லது கலை நிகழ்ச்சியில் அதிக சக்தி கொண்ட லேசர் லைட் வானில் செலுத்தப்பட்டிருக்கலாம் என்று ஒரு தரப்பினரால் கூறப்பட்டாலும் அதிகாரப்பூர்வ அறிவியல் ரீதியான விளக்கம் மட்டுமே பொதுமக்களின் அச்சத்தை அகற்றி பதற்றத்தை தணிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.