17 வருடங்களுக்கு முன், மும்பையை உலுக்கிய ஒரு பயங்கரவாத தாக்குதல்… அந்த தாக்குதலில் உயிருடன் கைது செய்யப்பட்ட ஒரே தீவிரவாதி – அஜ்மல் கசாப். இந்திய ராணுவத்துக்குப் பிறகு அவர் வழங்கிய வாக்குமூலம், இன்று நடந்த ஒரு முக்கியமான ராணுவ நடவடிக்கைக்கு வழிகாட்டியாகியுள்ளது.
இன்று அதிகாலை நடந்த ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற ரகசிய தாக்குதலில், இந்திய ராணுவம் பாகிஸ்தானின் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு செய்த காஷ்மீரின் ஒன்பது பயங்கரவாத முகாம்களை துல்லியமாக அழித்துள்ளது. இதில் ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதீன் போன்ற தடை செய்யப்பட்ட அமைப்புகளின் முக்கிய முகாம்கள் தாக்கப்பட்டுள்ளன.
அஜ்மல் கசாப் 2008ம் ஆண்டு விசாரணையில் கூறியது ஒன்று – பாகிஸ்தானின் பஹாவல்பூரில் உள்ள மர்காஸ் சுப்ஹான் அல்லா முகாமில் தான் பயிற்சி பெற்றதாகவும், இது தான் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் செயல்பாட்டுத் தலைமையகம் என்றும் கூறினார். அதே முகாமில்தான் புல்வாமா தாக்குதலுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டதும் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த டிப், இன்றைய தாக்குதலுக்குப் பின்புலமாக அமைந்தது. மர்காஸ் சுப்ஹான் அல்லா மட்டுமல்ல, தெஹ்ரா கலானில் உள்ள சர்ஜல் முகாம், கோட்லியில் உள்ள மர்காஸ் அப்பாஸ், முசாஃபராபாத்தில் உள்ள முகாம்கள் – இவை எல்லாம் மிக துல்லியமாக இலக்காகக் குறிவைக்கப்பட்டன.
இந்த தாக்குதலில், ஜெய்ஷ் தலைவர்களான மசூத் அசார் மற்றும் அவரது குடும்பத்தினர் வசிக்கும் இடங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. வேறு முகாம்களான மர்காஸ் தைபா, மர்காஸ் அஹ்லே ஹதீத், மர்காஸ் ரஹீல் ஷாஹித் போன்றவை லஷ்கர் மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீனின் கட்டுப்பாட்டில் இருந்தவை. இவை அனைத்தும் இன்று முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளன.
பூஞ்ச், ராஜௌரி, ரியாசி போன்ற எல்லைப் பகுதிகளில் இருந்த ஆயுதக் குடோன்களும் அழிக்கப்பட்டன. இவற்றில் பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிப்பதற்காக பாகிஸ்தான் ராணுவம், ஐஎஸ்ஐயின் ஆதரவுடன் செயல்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.
அஜ்மல் கசாப் கொடுத்த ஒரு சிறிய தகவல்.. 17 வருடங்களுக்கு பிறகு ஒரு பெரும் தாக்குதலுக்கு வழிகாட்டி ஆனது. இந்திய ராணுவத்தின் துல்லிய நடவடிக்கையால், இன்று அந்த பயங்கரவாத முகாம்கள் ஏதுமின்றி தூளாகிவிட்டன.