துபாயில் நடைபெற்ற 24H கார் ரேஸில் நடிகர் அஜித்குமாரின் ரேஸிங் அணி 3வது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது. இதையடுத்து இந்தியா முழுவதும் உள்ள நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவரும் உலக அரங்கில் இந்தியாவை உயர்த்திப் பிடித்த அஜித் குமாருக்கு, வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.
பொதுவாக பொது மேடைகள், விழாக்களை அஜித் கடந்த பல வருடங்களாகவே தவிர்த்து வருகிறார். சினிமாவில் மட்டும் தான் அவரைப் பார்க்க முடியும் என்பதால், அவரின் படங்களுக்கு என மிகப்பெரிய ஓபனிங் உள்ளது. இந்த காரணத்தினால் தான் ஏர்போர்ட், தனிப்பட்ட விழாக்கள் என எங்கு அஜித் சென்றாலும் ஒரு மாஸ் கூட்டம் கூடி விடுகிறது.
தற்போது துபாயிலும் அவருக்குக் கூடிய கூட்டத்தைப் பார்த்து அனைவரும் அரண்டு போய் கிடக்கின்றனர். மிகவும் பிடித்த ரேஸ் பந்தயம் அதிலும் 15 வருடங்களுக்குப் பிறகு கலந்து கொள்கிறார் என்பதால், வேறொரு துறுதுறு மகிழ்ச்சியான அஜித்தைப் பார்க்க முடிந்தது. இந்த சந்தோஷத்தில் ‘விடாமுயற்சி’ தள்ளிப்போனதைக் கூட ரசிகர்கள் மன்னித்து விட்டார்கள்.
இந்தநிலையில் ரேஸ் முடிந்ததும் மேடையில் நின்ற அஜித் சத்தமாக, ‘ஷாலு மா மீண்டும் என்னை ரேஸ் ஓட்ட அனுமதித்தற்கு நன்றி’ என உருக்கத்துடன் சொன்னார். அதோடு ஷாலினிக்கு ‘லிப் கிஸ்’ கொடுத்து தான் ஒரு ‘காதல் மன்னன்’ என்பதையும் நிரூபித்தார். இருவரையும் இப்படிப் பார்த்தபோது ‘அமர்க்களம்’ அஜித்-ஷாலினியை மீண்டும் பார்த்தது போல இருந்தது.
மகள் அனௌஷ்கா, மகன் ஆத்விக், மனைவி ஷாலினி இவர்களோடு ‘குட் பேட் அக்லி’ இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், ‘விடாமுயற்சி’ நடிகர் ஆரவ், நடிகர் மாதவன், அர்ஜுன் தாஸ் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் துபாய்க்கு படையெடுத்து அவரை உற்சாகப்படுத்தி மகிழ்ந்தனர். பறக்கும் முத்தங்கள், ஹார்ட்டின்கள், சக வீரர்களுடன் இணைந்து ஆடியது, ரசிகர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டது என மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்த அஜித்தைப் பார்த்து, ரசிகர்கள் தாங்களே வெற்றி பெற்றது போல கொண்டாடி வருகின்றனர்.
இதனால் சமூக வலைதளங்களை நேற்றில் இருந்து அஜித் மட்டுமே ஆண்டு வருகிறார். இதைவிட சிறப்பான ஒரு பொங்கல் டிரீட் இருக்க முடியாது என ரசிகர்களும் இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ளனர். கூடுதல் போனஸாக ‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவிருக்கிறது. மொத்தத்தில் இந்த பொங்கல் அனைவருக்குமே ‘தல’ பொங்கலாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.