விரைவில் அதிவேக 5ஜி சேவை- Airtel

623
Advertisement

அதிவேக 5ஜி சேவையை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது .

ஏர்டெல் நிறுவனம் தனது அதிவேக 5ஜி நெட்வொர்க் மற்றும் குறைந்த லேட்டன்ஸி திறனை காட்சிப்படுத்தியுள்ளது. இத்துடன் ஐ.ஓ.டி என அழைக்கப்படும் இணைய சேவை தொடர்பான கிளவுட் கேமிங், அணிந்துகொள்ளக்கூடிய சாதனங்கள், ட்ரோன்கள் ஆகியவற்றில் 5ஜி செயல்படும் விதம் குறித்தும் காட்டப்பட்டது.

5ஜி உதவியுடன் முன்னாள் இந்திய அணியின் கிரிக்கெட் கேப்டன் கபில் தேவின் உருவம் ஹோலோகிராமில் உருவாக்கப்பட்டது. 1983 உலகக்கோப்பையின்போது கபில் தேவ் 175 ரன்கள் அடித்த காட்சி 5ஜி ஹோலோகிராம் மூலம் மறு உருவாக்கம் செய்யப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டது.

இந்த அதிவேக இணையம் நடைமுறைக்கு வந்தால், நேரடியாக காணும் பொருள்களுக்கு வரைபடம், ஒலி உள்ளிட்டவற்றை முப்பரிணாமத்தில், நிகழும் நேரத்திலேயே இணைத்துக் காட்டும் இணைப்பு நிஜமாக்கம் (Augmented Reality), கணினியால் உருவாக்கப்பட்ட தோற்றங்களை நேரில் இருக்கும் உண்மையான உருவம் போலவே காட்டும் மெய்நிகர் உண்மை (Virtual reality) போன்றவற்றை பயனர்கள் அனுபவிக்க முடியும்.

தற்போதைய 4ஜி வேகம் சராசரியாக நொடிக்கு 42 மெகா பைட்-ஆக இருக்கிறது. ஆனால் தொலைத் தொடர்புத் துறையினரோ நொடிக்கு 1 ஜிகா பைட் வேகம் வரை தொடலாம் என்கிறார்கள்.

5ஜி மூலம் தற்போது இருக்கும் இணைய வேகத்தை விட 10 முதல் 20 மடங்கு அதிக வேகத்தில் இணைய சேவையைப் பெறலாம் என்கிறது க்வால்காம் நிறுவனம். இதனால் ஒரு ஹெச்.டி சினிமா படத்தைக் கூட ஒரு நிமிடத்துக்குள் சட்டென பதிவிறக்கம் செய்துவிடலாம்.

இன்னும் 2 மாதத்தில் 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் நடைபெறவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின் 5ஜி சேவை விரைவில் அறிமுகம் செய்யப்படும் என ஏர்டெல் அறிவித்துள்ளது.