சென்னை உள்பட பல்வேறு நகரங்களில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் ஏர் இந்தியா விமானங்களில் பயணிகளுக்கு அவ்வப்போதும் ஏதேனும் அம்சங்களை கொண்டு வருவதுண்டு. அந்த வகையில் தற்போது கொண்டுவந்துள்ள அம்சத்தை கண்டு பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அதாவது, தென்னிந்திய சுவையான உணவுகளையும் மற்றும் பிரியாணி போன்ற இந்தியாவின் சிறப்பான உணவுகளையும் இலவசமாக வழங்கப் போவதாக ஏர் இந்தியா விமான நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன்படி, சென்னை- துபாய்-சென்னை, சென்னை- சிங்கப்பூர்- சென்னை மற்றும் சென்னையில் இருந்து மும்பை டெல்லி வழியாக பல்வேறு வெளிநாடுகளுக்கு செல்லும் ஏர் இந்தியா விமான பயணிகள் உள்ளிட்டோருக்கு இந்த உணவு வகைகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சரி, தற்போது என்னனென்ன உணவுகள் என்பதை பார்க்கலாம்!!
இந்த உணவில் தென்னிந்திய உணவுகளான குறிப்பாக தமிழ்நாட்டு உணவான மிளகாய் பொடி இட்லி, முந்திரி உப்புமா, மினி மைசூர் மசால் தோசை, கிச்சடி, பரோட்டா, சாம்பார், மூன்று வகை சட்னிகளான தேங்காய் சட்னி, கார சட்னி, புதினா சட்டினி ஆகியவைகளும் வழங்கப்பட இருக்கின்றன.
மேலும், இதுதவிர சுவையான பிரியாணி வகைகள், மலபாரி சிக்கன் கறி, சிக்கன் பிம்பாப் மற்றும் வட இந்திய சைவ அசைவ உணவுகள், ஆசிய ஐரோப்பிய நாடுகளின் உணவுகள், ஜப்பான் நாட்டு உணவுகள் என்று பல தரப்பு உணவுகளையும் சிறந்த சமையல் கலைஞர்கள் மூலம் தயாரித்து விமான பயணிகளுக்கு சுடச்சுட விமானங்களில் பரிமாறுவதற்கு ஏற்பாடுகளை ஏர் இந்தியா நிறுவனம் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது ஒரு புறம் இருக்கட்டும், இந்த உணவுகளை எப்படி தேர்வு செய்து பெற்றுக்கொள்வது என்ற சந்தேகம் எழுகிறதா? இதற்கும் பதில் உண்டு!!
அதாவது, இதில் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்யும்போதே, பயணிகளுக்கு சைவ உணவா அல்லது அசைவ உணவா எந்த விதமான உணவுகள் வேண்டும், அதேபோல் விருப்பப்படும் உணவுகள் குறித்தும் தெரியப்படுத்தி விட வேண்டும். அவ்வாறு செய்துவிட்டால் பயணிகளுக்கு விருப்பமான உணவுகள் விமானத்தில் வழங்கப்படும் என்று ஏர் இந்தியா நிறுவனம் அறிவிக்கிறது.
ஆனால் இந்த உணவு வகைகள் சர்வதேச விமானங்களில் பயணிக்கும் பயணிகளுக்கு தான் தற்போது இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. உள்நாட்டு விமானங்களில் பயணிக்கும் பயணிகளுக்கு தற்போது இந்த திட்டம் செயல்படுத்தப்படவில்லை. ஆனால் வெகு விரைவில் உள்நாட்டு ஏர் இந்தியா விமான பயணிகளும் இதுபோன்ற உணவு வகைகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
