Wednesday, July 30, 2025

ஏர் இந்தியா விமான விபத்து : விமானியின் கடைசி வார்த்தைகள் என்ன?

இந்தியாவை மிகப்பெரும் துயரத்தில் ஆழ்த்திய, ஏர் இந்தியா விமான விபத்து குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விமானத்தின் கருப்பு பெட்டி கண்டு பிடிக்கப்பட்டாலும் கூட, விபத்துக்கான காரணம் இன்னும் தெளிவாகவில்லை.

இந்தநிலையில் விமானம் விபத்தில் சிக்குவதற்கு முன்பு, விமானி பேசிய கடைசி வார்த்தைகள் குறித்து தெரிய வந்துள்ளது. அதில் அவர், ” தேவையான உந்துசக்தி கிடைக்கவில்லை. விமானம் விழப்போகிறது. MayDay MayDay MayDay,” இவ்வாறு 3 முறை தெரிவித்துள்ளார்.

MayDay என்பது அவசர காலங்களில் பயன்படுத்தப்படும் ஒரு வார்த்தையாகும். இந்த வார்த்தைக்கு எங்களுக்கு உதவி தேவை என்பது அர்த்தம். விமானி இதுபோல உதவி கேட்கும்போது விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை, மற்ற அனைத்து தகவல் தொடர்புகளையும் துண்டித்து விட்டு அவர்களுக்கு தேவையான உதவிகளை விரைந்து அனுப்பும். ஆனால் விபத்தில் சிக்கிய ஏர் இந்தியா விமானம், விமானி பேசும்போதே கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்கு உள்ளானது.

தற்போது விமானி பேசிய கடைசி வார்த்தைகள் தெரிய வந்துள்ளன. உந்துசக்தி கிடைக்கவில்லை என்று விமானி பதட்டம் கலந்த குரலில் தெரிவித்து இருக்கிறார்.

பொதுவாக பெரிய விமானங்கள் தேவையான உந்து சக்தியை பெறுவதற்கு 2.5 கிலோ மீட்டர் தொடங்கி 3 கிலோ மீட்டர் வரை ஓடுபாதையில் சென்றாலே போதும். ஆனால் விபத்தில் சிக்கிய ஏர் இந்தியா விமானம் 3.5 கிலோ மீட்டர் தூரம் ஓடுபாதையில் பயணித்துள்ளது. இது கண்காணிப்பு கேமராவிலும் பதிவாகி இருக்கிறது. அப்படி இருந்தும் உந்துசக்தி கிடைக்கவில்லை என்று விமானி தெரிவித்து உள்ளார்.

விபத்து நடந்த ஜூன் 12ம் தேதி வானிலை சீராக இருந்துள்ளது. ராடார் குறைபாடு எதுவும் காணப்படவில்லை. விமானத்தில் என்ஜின் கோளாறு கண்டறியப்படவில்லை. முறையாக அனைத்து தகவல் தொடர்பு மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளும் பின்பற்றப்பட்டு இருக்கின்றன. அப்படி இருந்தும் விமானம் எப்படி கட்டுப்பாட்டை இழந்தது? என்னும் கேள்வி எழுந்துள்ளது.

இதையடுத்து விமானத்திற்கு தேவையான உந்துசக்தி கிடைக்காத காரணத்தை கருப்பு பெட்டி, விமானிகள் அறையின் குரல் பதிவு மற்றும் விமான தரவுகள் ஆகியவற்றை வைத்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News