கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பத்தினரை மாமல்லபுரம் அருகே உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் சந்தித்து ஆறுதல் கூறிய தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்யின் நடவடிக்கைக்கு, இயக்குநர் சேரன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினரை நேரில் சந்திக்க முடியாததற்கு விஜய் மன்னிப்பு கோரி, அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க உறுதியளித்திருந்தார். இதுகுறித்து சேரன் தனது சமூக ஊடகப் பதிவில், ‘நானும் விஜய் கரூர் செல்ல வேண்டும் என நினைத்திருந்தேன். ஆனால், அனைவரின் கருத்துக்களை மீறி, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை அழைத்து வந்து அமைதியான சூழலில் நேரில் ஆறுதல் கூறியது ஒரு சிறந்த முடிவு,’ என தெரிவித்துள்ளார்.
அவர் மேலும், ‘கரூரில் நேரில் சென்றிருந்தால் கூட இவ்வளவு நெருக்கமாகவும் மனதாரவும் பேச முடியாது. நீங்கள் எடுத்த முடிவு சரியானது. இப்போது உலகம் உங்களை கவனிக்கிறது. நீங்கள் உருவாக்கும் அமைப்பு தவறாமல் வலுப்பெற வேண்டும். அதுவே உங்கள் அரசியல் வளர்ச்சிக்கான அடித்தளம்,’ எனவும் கூறியுள்ளார்.
தொடர்ந்து, ‘உங்கள் தொண்டர்களை ஒழுங்குபடுத்துங்கள், கட்டமைப்பை உறுதிப்படுத்துங்கள்.
இதுவரை உங்களை ரசிகர்களாக இருந்தவர்கள், இனி சமூக பாதுகாவலர்களாக மாற வேண்டும். நடந்த சம்பவத்தின் கறை முழுமையாக அழிய வேண்டுமெனில், அது தொண்டர்களின் நடத்தையில் பிரதிபலிக்க வேண்டும். மக்களுடன் கலந்துவாழுங்கள். இலக்கு 2026 அல்ல, 2031 என்று வைத்துக்கொண்டு முன்னேறுங்கள் – முடியும்,’ என விஜய்க்கு உத்வேகமளிக்கும் விதமாக சேரன் பதிவிட்டுள்ளார்.
