அதிமுக கவுன்சிலரை திமுகவினர் கடத்திவிட்டதாக கூறி, கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு அதிமுகவினர் போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.
கிருஷ்ணகிரி நகராட்சியில், திமுக நகர் மன்ற தலைவருக்கும், உறுப்பினர்களுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. நகர் மன்ற தலைவரை மாற்ற வேண்டும் என உறுப்பினர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்த நிலையில், 2 நாட்களுக்கு முன்னர் கவுன்சிலர்கள் 20 பேர் கேரளா மாநிலத்துக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.
அதே சமயம் தொடர் மன உளைச்சலால் நெஞ்சுவலிப்பதாக கூறி நகர் மன்ற தலைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், 9வது வார்டு அதிமுக கவுன்சிலர் நாகஜோதியை, திமுகவினர் மனமாற்றம் செய்து கடத்திவிட்டதாக கூறி, கிருஷ்ணகிரி எம்.எல்.ஏ அசோக்குமார் தலைமையில், அதிமுகவினர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.
