சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த கோபால் (வயது 41). சீனாவில் பணியாற்றி வரும் இவர், கடந்த ஜனவரி மாதம் விடுமுறைக்காக அவர் சென்னை வந்திருந்தார்.
கடந்த ஜனவரி 30ஆம் தேதி, இளம் பெண் ஒருவர் அடையாறு பகுதியில் சாலையில் நடந்து சென்றபோது, மோட்டார் சைக்கிளில் வந்த கோபால் அந்த பெண்ணிடம் பாலியல் ரீதியாக அறுவருப்பான முறையில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, கோபால் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
போலீசார் அவரைத் தேடி வந்தனர். தன்னை போலீசார் தேடுவதை அறிந்த கோபால், ரகசியமாக சீனாவுக்கு தப்பிச் சென்றுவிட்டார். அவர் வெளிநாட்டிற்கு சென்ற விஷயம் போலீசாருக்கு பின்னர்தான் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, கோபால் மீண்டும் இந்தியாவிற்கு வந்தால் கைது செய்ய வேண்டும் என்ற நோக்கில், சென்னை போலீசார் அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பினர்.
இந்த நிலையில், 11 மாதங்களுக்குப் பிறகு, நேற்று முன்தினம் கோபால் சீனாவிலிருந்து சென்னை வராமல், மும்பை விமான நிலையத்தில் வந்து இறங்கினார். அப்போது, விமான நிலைய அதிகாரிகள் அவர்மீது ஏற்கனவே லுக் அவுட் நோட்டீஸ் இருப்பதை அறிந்து, அவரை தடுத்து நிறுத்தி சென்னை போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
அதன் அடிப்படையில், அடையாறு அனைத்து மகளிர் போலீசார் மும்பைக்கு சென்று கோபாலை கைது செய்து, சென்னை அழைத்து வந்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.
