Thursday, February 5, 2026

பாகிஸ்தான் தலையில் ஆப்கானிஸ்தான் இறக்கிய இடி! இனி பாக். நிலைமை என்னவாகப் போகிறது?

பாகிஸ்தானுக்கு செல்லும் தண்ணீரை தடுக்க ஆப்கானிஸ்தான் அரசு குனார் நதியில் புதிய அணை அமைக்க இருப்பதாக அறிவித்துள்ளது.

இரு நாடுகளும் சுமார் 2,640 கிலோமீட்டர் நீள எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளன. அண்மைக் காலங்களில் எல்லை பிரச்சினையை மையமாகக் கொண்டு கடுமையான மோதல்கள் தொடர்ந்து நடந்தன. கத்தார் நாட்டின் நடுவர் முயற்சியால் அக்டோபர் 19ம் தேதி தற்காலிக சண்டை நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டாலும், எல்லைப் பகுதிகளில் இன்னும் பதற்றமான நிலை நீடிக்கிறது.

480 கிலோமீட்டர் நீளமுள்ள குனார் நதி இரு நாடுகளிலும் பாய்கிறது. இதில் சுமார் 70 சதவீத தண்ணீரை பாகிஸ்தான் பயன்படுத்தி வருவதாக ஆப்கான் அரசு குற்றம் சாட்டுகிறது. இதனைத் தடுக்க புதிய அணை அமைக்க தீர்மானித்துள்ளதாக நீர்வளத் துறை அமைச்சர் முல்லா அப்துல் லத்தீப் மன்சூர் தெரிவித்துள்ளார். ‘குனார் நதியில் புதிய அணை கட்டப்படும். இந்த நதியின் நீர் ஆப்கானிஸ்தான் மக்களுக்குரியது,’ என்று அவர் சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.

நீர்வளம் மற்றும் எரிசக்தி துறை செய்தித் தொடர்பாளர் மதியுல்லா அபித் கூறியதாவது: ‘குனார் நதியில் அணை கட்டும் பணிக்கான கள ஆய்வு முடிவடைந்துள்ளது. திட்ட அறிக்கையும் தயாராகியுள்ளது. அணை மூலம் 1,50,000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்; மேலும் 45 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்’, என்றார்.

குனார் நதி தொடர்பாக ஆப்கானிஸ்தான்–பாகிஸ்தான் இடையே எந்த ஒப்பந்தமும் இல்லை என்பதால், பிரச்சினையின்றி அணை கட்டப்படும் என்றும், இதன் மூலம் பாகிஸ்தானுக்கு செல்லும் தண்ணீர் தடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஆப்கான் அரசு வட்டாரங்கள் கூறுகையில், ‘இந்தியா சிந்து நதி ஒப்பந்தத்தை ரத்து செய்ததைப் போல, நாங்களும் குனார் நதியில் அணை அமைத்து நம் உரிமையை நிலைநிறுத்துவோம்,’ என தெரிவித்தன.

Related News

Latest News