நடிகரும் த.வெ.க. தலைவருமான விஜய், 2016–17 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்திருந்தார். அதில், அந்த ஆண்டிற்கான தனது வருமானம் ரூ.35 கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து 890 என குறிப்பிட்டிருந்தார். ஆனால், “புலி” திரைப்படத்தில் நடிப்பதற்காக பெற்ற ரூ.15 கோடி தொகையை வருமான வரி கணக்கில் சேர்க்காமல் மறைத்ததாக வருமான வரித்துறை அதிகாரிகள் கண்டறிந்தனர்.
இதனைத் தொடர்ந்து, நடிகர் விஜய்க்கு ரூ.1 கோடியே 50 லட்சம் அபராதம் விதித்து, வருமான வரித்துறை 2022ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அபராத தொகைக்கு இடைக்கால தடை விதித்தது.
இந்த நிலையில், இந்த வழக்கு நேற்று நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வருமான வரித்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏ.பி. சீனிவாஸ், “இந்த அபராதம் காலதாமதமாக விதிக்கப்பட்டதாக மனுதாரர் தரப்பு கூறுவது சரியல்ல. நடிகர் விஜய் தரப்பினர் முதலில் வருமான வரித்துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தை அணுகியுள்ளனர். தீர்ப்பாயம் உத்தரவிட்ட பின்னரே இந்த அபராதத்தை வருமான வரித்துறை விதித்துள்ளது. இதில் எந்த தவறும் இல்லை” என வாதிட்டார். இதையடுத்து, வழக்கின் விசாரணையை வருகிற 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
