பெண் நோயாளியின் அனுமதி இன்றி, அவரது எக்ஸ்ரேயை ஆண் மருத்துவர் ஒருவர் விற்ற செயல் சமூக ஊடகத்தில் வைரலாகத் தொடங்கியுள்ளது.
தென்மேற்கு பாரிஸ் நகரிலுள்ள ஜார்ஜஸ் பாம்பிடோ பொது மருத்துவமனையில் மூத்த எலும்பியல் அறுவை சிகிச்சை மருத்துவராகப் பணிபுரிந்து வருபவர் இம்மானுவேல் மஸ்மேஜின். இவர், அந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பெண் நோயாளியின் எக்ஸ்ரேயை அவரது அனுமதியின்றி கலைப்படைப்புக்காகப் புகழ்பெற்ற ஓபன் சீ என்னும் இணைய தளத்திடம் 2 ஆயிரத்து 776 டாலர் தொகைக்கு விற்பனை செய்துள்ளார்.
டாக்டரின் இந்தச் செயல் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருப்பதுடன், டாக்டர்களின் செயல்மீதான நோயாளிகளின் நம்பிக்கையைக் கேள்விக்குறியாக்கியுள்ளது. இதனால், சட்ட நடவடிக்கை மற்றும் துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாகியுள்ளார் டாக்டர் இம்மானுவேல்.
அதேசமயம், தனது செயலை ஒப்புக்கொண்டுள்ள டாக்டர் இம்மானுவேல், அந்தப் பெண் நோயாளியிடம் அனுமதி பெறாததற்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.
2015 ஆம் ஆண்டில் பாரிஸ் நகரில் நடைபெற்ற ஓர் இசை நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்தது. இதில், 130பேர் பலியாகிவிட்டனர். இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அந்தப் பெண்ணின் வலது முழங்கையில் குண்டு துளைத்தது.
அதைத் தொடர்ந்து அந்தக் குண்டை அகற்றவும், சிகிச்சை எடுத்துக்கொள்ளவும் ஜார்ஜஸ் பாம்பிடோ பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவத்தில் தனது காதலனை இழந்துவிட்டார் அந்தப் பெண்.
மருத்துவமனை நிர்வாகமும் டாக்டர் இம்மானுவேலின் செயல், தொழில் நடைமுறைக்கு முரணானது, மருத்துவ ரகசியத்தை ஆபத்தில் ஆழ்த்துகிறது என்று கண்டித்துள்ளது.