நீலகிரி மாவட்டம் உதகையை சேர்ந்தவர் பிரவீன் (22). டிப்ளமோ முடித்த இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். பிரவீன் கடந்த இரண்டு ஆண்டுகளாக உதகையை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவியை (15 வயது) காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில் பிரவீனுக்கு உதகை அரசு கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு அவரையும் திருமண ஆசை வார்த்தை கூறி காதலித்து வந்துள்ளார். இதற்கிடையே கல்லூரி மாணவிக்கு தெரியாமல் பள்ளி மாணவியுடன் திருமண ஆசை கூறி பல முறை உடலுறுவில் ஈடுபட்டுள்ளார்.
இதன் பின்னர் பள்ளி மாணவியுடன் மீண்டும் சண்டையிட்டு பிரிந்து சென்று கல்லூரி மாணவியிடமும் தாம்பத்தியத்தில் ஈடுபட்டுள்ளார். இதன் காரணமாக கடந்த ஆறு மாதத்திற்கு முன்னர் கல்லூரி மாணவி கர்ப்பமானது தெரிய வந்ததால், மாணவியின் வீட்டிற்கு தெரியாமல் பிரவீன் அவரை திருமணம் செய்து கொண்டு தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.
இந்தநிலையில் உதகையில் பள்ளி மாணவிக்கு கடந்த 3-ந் தேதி திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து பள்ளி மாணவியின் தாயார் அவரை உதகை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றபோது மாணவி கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்ததோடு மாணவியை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் தாயார் அதிலிருந்து மீள்வதற்குள் பள்ளி மாணவிக்கு அழகான பெண் குழந்தை பிறந்ததுள்ளது.
இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்தினர் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிக்கும், உதகை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.
புகாரின் பெயரில் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் நித்யா தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி 15 வயது சிறுமியை கர்ப்பம் ஆக்கியதால் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து பிரவீனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் தற்போது பள்ளி மற்றும் கல்லூரி மாணவியின் குடும்பத்தினர் கை குழந்தைகளுடன் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர். விஜய் சேதுபதி நடிப்பில் உருவான ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படத்தில் வருவது போல உதகை இளைஞர் செய்த செயல் பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
