டெல்லி ஜனக்புரி பகுதியில் சாலையில் மூடப்படாமல் இருந்த பள்ளத்தில் விழுந்து 25 வயது இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் யுவராஜ் சிங் (25) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நேற்று இரவு யுவராஜ் சிங் தனது மோட்டார் சைக்கிளில் ஜனக்புரி மேம்பாலத்தின் கீழ் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் டெல்லி ஜல் போர்டின் குடிநீர் வழங்கல் தொடர்பான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக தோண்டப்பட்ட பெரிய பள்ளம் எந்தவிதமான எச்சரிக்கை பலகைகள், தடுப்புகள் எதுவும் இல்லாமல் திறந்த நிலையில் இருந்துள்ளது.
இரவு நேரம் என்பதால் அந்த பள்ளத்தை கவனிக்க முடியாமல், யுவராஜ் சிங் தனது பைக்குடன் நேரடியாக பள்ளத்தில் விழுந்தார். இந்த விபத்தில் அவருக்கு தலையில் கடுமையான காயம் ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, ஜல் போர்டைச் சேர்ந்த நிர்வாகப் பொறியாளர், உதவி பொறியாளர் மற்றும் இளநிலைப் பொறியாளர் என மூன்று பேர் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
