சென்னையை அடுத்த பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மகாலட்சுமி (வயது 38) என்பவர், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 1ஆம் தேதி ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள சோழிங்கநல்லூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது சோழிங்கநல்லூர் பகுதியில் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் அவர் விபத்துக்குள்ளாகி சுயநினைவு இழந்தார். இதனைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக அவரை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் மருத்துவமனைக்கு வந்த மகாலட்சுமியின் உறவினர்கள், அவர் கழுத்தில் அணிந்திருந்த 8 சவரன் தங்க தாலி சங்கிலி காணாமல் போனதை கவனித்தனர். மயக்கம் தெளிந்த பின்னர் மகாலட்சுமியிடம் கேட்டபோது, அந்த தாலி எங்கே போனது என்பது தெரியவில்லை என அவர் தெரிவித்தார். இதையடுத்து, அவரது மகன் செம்மஞ்சேரி குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் குற்றப்பிரிவு ஆய்வாளர் சித்ரா தலைமையிலான போலீசார், சம்பவ இடத்திலுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். மேலும், விபத்து நேரத்தில் மகாலட்சுமிக்கு உதவிய நபர்களிடம் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், விபத்து ஏற்பட்ட உடனே முதலில் உதவ முன்வந்த சென்னை சுனாமி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த ஆஷா (வயது 28) என்ற பெண், மகாலட்சுமியின் கழுத்தில் இருந்த 8 சவரன் தங்க தாலி சங்கிலியை திருடிச் சென்றது தெரியவந்தது.
அந்த தங்க தாலி சங்கிலியை சிறு சிறு நகைகளாக பிரித்து, ஒரு பகுதியை விற்று போதைப் பொருட்கள் வாங்கி பயன்படுத்தியதும் விசாரணையில் தெரிய வந்தது. மீதமிருந்த 7 சவரன் தங்க தாலி சங்கிலியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, ஆஷாவை கைது செய்த செம்மஞ்சேரி போலீசார், அவர் மீது வழக்குப் பதிவு செய்து சோழிங்கநல்லூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
