Thursday, December 11, 2025

பிரம்மபுத்திரா நதியின் கீழ் சுரங்கப்பாதை! 32 மீட்டர் ஆழத்தில் அமையவிருக்கும் அதிசயம்!

நாட்டில் முதல் முறையாக, அசாம் மாநிலத்தில் பிரம்மபுத்திரா நதிக்கு கீழ் சுரங்கப்பாதை அமைக்கும் திட்டம் ரூ.6,000 கோடி மதிப்பில் தயாரிக்கப்பட்டுள்ளது. நுமலிகர் முதல் கோஹ்பூர் வரை சுமார் 33.7 கிலோமீட்டர் நீளத்தில், நதிக்கு கீழ் 32 மீட்டர் ஆழத்தில் இச்சுரங்கப்பாதை உருவாக்கப்பட உள்ளது. திட்டம் நிறைவு பெற ஐந்து ஆண்டுகள் ஆகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது தயாராகியுள்ள இந்த அறிக்கை விரைவில் மத்திய அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட உள்ளது. பிரதமர் தலைமையிலான அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்தவுடன், பணிகள் தொடங்கும். தேசிய நெடுஞ்சாலை மற்றும் கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனம் இத்திட்டத்தை செயல்படுத்தும். மேலும் வனவிலங்கு வாழ்வுக் குழுவும் திட்டத்துக்கு ஏற்கனவே அனுமதி வழங்கியுள்ளது. நிலத்தடி நீர், மண்ணின் நிலைத்தன்மை, புவியியல் மாற்றங்கள் போன்றவைகள் குறித்து அறிவியல் மதிப்பீட்டும் கேட்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு முக்கியத்துவம் கருதி பிரம்மபுத்திரா நதிக்கு கீழ் சுரங்கப்பாதை அமைக்கப்படுவதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை தெரிவித்துள்ளது.
அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா இதுகுறித்து தெரிவித்ததில், ‘பிரம்மபுத்திரா ஆற்றுக்கு மேல் பல பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. ஆனால், ஏன் ஆற்றுக்கீழ் சுரங்கப்பாதை அமைக்கக்கூடாது என நான் யோசித்தேன். ஜம்மு காஷ்மீரில் அடல் சுரங்கப்பாதை மலையின்கீழ் அமைக்கப்பட்டுள்ளதுபோல, இப்போது பிரம்மபுத்திரா நதிக்கீழ் சுரங்கப்பாதை அமைக்க திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது’ என்றார்.
இந்த திட்டம் நிறைவேறினால், அசாமில் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு துறைகளில் வரலாற்றுச் சாதனை நிகழும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

Latest News