தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைத்தாரர்களுக்கு வரும் தை மாதம் இரட்டிப்பு நன்மைகளை வழங்கக்கூடிய மாதமாக இருக்கும் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படுவதுடன், பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரொக்கப் பணமும் சேரக்கூடும் என்ற செய்திகள் வெளியாவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
குறிப்பாக, கடந்த ஆண்டில் ரொக்கப் பணம் வழங்கப்படாதது கடுமையான விமர்சனத்தை ஏற்படுத்தியதால், இந்த ஆண்டு மீண்டும் ரொக்கமாக பணம் வழங்கப்படும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
2021ஆம் ஆண்டு திமுக ஆட்சி பொறுப்பேற்றதையடுத்து, 2022ஆம் ஆண்டு பொங்கலுக்கு 21 மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டன. 2023 மற்றும் 2024 பொங்கல்களில் பச்சரிசி, சர்க்கரை, கரும்பு ஆகியவற்றுடன் 1,000 ரூபாயும் சேர்த்துக் கொடுக்கப்பட்டது. ஆனால் 2025ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையில் ரொக்கத் தொகை நீக்கப்பட்டு, உணவுப் பொருட்கள் மட்டுமே வழங்கப்பட்டது. இது பொதுமக்களில் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.
2026 சட்டசபை தேர்தலை முன்னிட்டு, இம்முறை பொங்கல் பரிசில் ரொக்கத் தொகை மீண்டும் வழங்கப்படும் என சொல்லப்படுகிறது. 2021ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் அதிகபட்சமாக 2,500 ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்ட நிலையில், இம்முறை அதையும் மீறி 5,000 ரூபாய் வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக மட்டுமே சுமார் 11,000 கோடி ரூபாய் தேவைப்படும் என கணக்கிடப்பட்டுள்ளது.
இதனிடையே, விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை டிசம்பர் 12ஆம் தேதி முதல் வழங்கப்படும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்தத் திட்டம் 2023 செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட்டதாகவும், ஒவ்வொரு மாதமும் 1,000 ரூபாய் நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படுவதையும் அவர் நினைவுபடுத்தினார்.
இதன் மூலம் டிசம்பர், ஜனவரி மாதங்களில் மகளிர் உரிமைத்தொகை மற்றும் பொங்கல் ரொக்கப் பரிசு ஒரே நேரத்தில் கிடைக்கவுள்ளதால், தை மாதம் ரேஷன் அட்டைத்தாரர்களுக்கு “டபுள் ட்ரீட்” ஆக அமைய உள்ளது.
