இந்தியா மே 7 முதல் 10 வரை பாகிஸ்தான் மீது ‛ஆபரேஷன் சிந்தூர்’ என்ற வான்வழித் தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் இந்தியா பயன்படுத்திய பிரம்மோஸ் சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணை பாகிஸ்தானின் ராணுவத்தையும், பயங்கரவாத முகாம்களையும், விமானப்படை தளங்களையும் இடிந்து விழச்செய்தது. இது பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய அதிர்வாக இருந்தது.
இந்த தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தான் தனது வான்வெளி பாதுகாப்பை பலப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் விழுந்தது. HQ-9B, HQ-16 போன்ற சீன தயாரிப்பு பாதுகாப்பு அமைப்புகள் பிரம்மோஸை தடுக்க முடியவில்லை என்பதால்தான், பாகிஸ்தான் தற்போது ஜெர்மனியின் IRIS-T அல்லது இத்தாலியின் CAMM-ER என்ற மேம்பட்ட வான் பாதுகாப்பு அமைப்புகளை வாங்க பரிசீலிக்கிறது.
இத்தாலியின் CAMM-ER என்பது 45 கிமீ வரம்பு மற்றும் 20 கிமீ உயரத்தில் இலக்குகளை தாக்கும் திறன் கொண்டது. ஆனால் இந்த அமைப்பின் இடைமறிப்பு வேகம் பிரம்மோஸை விட சற்று குறைவாக உள்ளது. அதனால் பாகிஸ்தானின் முதல் விருப்பமாக ஜெர்மனியின் IRIS-T அமைப்பு தான் பார்க்கப்படுகிறது.
IRIS-T அமைப்பின் முக்கியத் தகுதி என்னவென்றால், இது மேம்பட்ட ‘imaging infrared ‘ என்னும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைக் கூடத் துல்லியமாக இடைமறிக்கிறது. இதில் உள்ள TVC எனப்படும் உந்துதல்-வெக்டர் கட்டுப்பாடு, வேகமாக நகரும் இலக்குகளையும் துல்லியமாகத் தாக்க உதவுகிறது. இது பிரம்மோஸைத் தடுக்க ஒரு முக்கிய அம்சமாகும்.
உக்ரைனில் ரஷ்யா ஏவிய 60க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை இந்த IRIS-T இடைமறித்துள்ளது. இதில் P-800 Onyx ஏவுகணையும் அடங்கும். பிரம்மோஸும் அதே வகையை சேர்ந்ததென்றால், IRIS-T அதன் எதிரிக்கு சரியான பதிலாக இருக்கலாம்.
ஆனால் இங்கு ஒரு பெரிய கேள்வி எழுகிறது. சமீபத்தில் இந்தியா மற்றும் ஜெர்மனி நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இந்நிலையில் ஜெர்மனி, இந்தியா போன்ற உறவுக்கு முக்கியத்துவம் தருமா? அல்லது பாகிஸ்தானுக்கு IRIS-T கொடுக்க தயார் ஆகுமா? என்பது பெரிய சந்தேகமாகயிருக்கிறது.
எல்லாவற்றையும் வைத்து பார்த்தால், இந்தியாவின் பிரம்மோஸ் தாக்குதலால் நிலைதவறிய பாகிஸ்தான், தற்போதைய நிலைமைக்கு ஒரு பதிலாக IRIS-T பாதுகாப்பு அமைப்பைத் தேர்வு செய்ய தீர்மானித்துள்ளது. ஆனால் அதற்கான அனுமதி கிடைக்குமா என்பதைக் கூறும் உரிமை இப்போது ஜெர்மனியிடம் தான் உள்ளது.