2026ம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் ஒவ்வொரு சனிக்கிழமையும் பல்வேறு பகுதிகளில் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து வருகிறார். அதன் அடிப்படையில் இன்று நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் அவர் பரப்புரை மேற்கொள்ள இருக்கிறார்.
நாமக்கல் கே.எஸ். திரையரங்கம் அருகில் காலை 8.45 மணிக்கும், கரூர் வேலுச்சாமிபுரத்தில் மதியம் 12 மணிக்கும் விஜயின் பிரச்சாரத்துக்கு போலீசார் அனுமதி வழங்கினர். இதனை முன்னிட்டு நாமக்கல் கே.எஸ். திரையரங்கம் பகுதி இன்று காலை முதலே தொண்டர்களால் நிரம்பியது. அதிகமான மக்கள் வருகையால் சேலம்–நாமக்கல் சாலை காலை 8 மணி முதல் முற்றிலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் மாற்றுப் பாதை வழியாக செல்லுமாறு போலீசார் வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர் .
ஆனால் காலை 8.45 மணிக்கே விஜய் சென்னையிலிருந்து தனியார் விமானத்தில் திருச்சிக்கு புறப்பட்டார். அங்கிருந்து சாலை வழியாக நாமக்கல் செல்ல அவருக்கு இரண்டு மணி நேரம் ஆகும் நிலையில், நண்பகல் 12 மணிக்கு தான் அவர் பிரச்சாரத்தில் பங்கேற்க முடியும் என தவெக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இதற்காக, நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் விஜயின் பிரச்சார வாகனம் செல்லும் ஒவ்வொரு இடத்திலும் தொண்டர்களை ஒழுங்குபடுத்த தலா 300 தன்னார்வலர்களுக்கு முன்னதாகவே பயிற்சி அளிக்கப்பட்டது. இன்று காலை முதலே சீருடை அணிந்த தன்னார்வலர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தண்ணீர் பாட்டில்கள், ஆம்புலன்ஸ் வசதி, முதலுதவி மருத்துவ மையங்கள் என பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.