திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இன்று (டிசம்பர் 29) திமுக மகளிர் அணி சார்பில் மேற்கு மண்டல மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட 39 சட்டமன்றத் தொகுதிகளில் இருந்து சுமார் ஒன்றரை லட்சம் மகளிர் அணியினர் கலந்து கொள்ள உள்ளனர்.
“வெல்லும் தமிழ்ப் பெண்கள்” என்ற முழக்கத்துடன் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மாநாட்டிற்கு திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற குழு தலைவருமான கனிமொழி தலைமை வகிக்கிறார். மேலும், திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார்.
மாநாட்டில் பங்கேற்கும் மகளிர் அணியினருக்கு மாவட்டம் வாரியாக வெவ்வேறு நிறங்களில் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. மாநாட்டில் கலந்து கொள்ளும் பெண்களின் வசதிக்காக குடிநீர், கழிப்பிடம், உணவு உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி 10 வகையான ஸ்னாக்ஸ் அடங்கிய பை ஒவ்வோரு இருக்கையிலும் வைக்கப்பட்டு உள்ளது.
மகளிர் நலனை மையமாகக் கொண்டு திமுக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை பொதுமக்களிடம் மேலும் கொண்டு சேர்க்கும் நோக்கில் இந்த மாநாடு நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.
