பாகிஸ்தான் கடுமையான பணவீக்கத்தைச் சந்தித்து வருகிறது. சமையலுக்குப் பயன்படும் அத்தியாவசியப் பொருட்கள் உட்பட அனைத்துப் பொருட்களின் விலையும் தினமும் கடுமையாக உயர்ந்துவருகிறது. இதனால், மக்களின் செலவு அதிகரித்து பெரும் பொருளாதார நெருக்கடியும் ஏற்பட்டு வருகிறது.
இந்த விவகாரம் அந்நாட்டு நாடாளுமன்றத்தினுள்ளே பெரும் அதிர்வலைகளையும், விவாதங்களையும் எழுப்பியுள்ளது. குறிப்பாக காஷ்மீர், பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா மேற்கொண்ட ராஜாங்க ரீதியான நடவடிக்கைகள் பாகிஸ்தானின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
அதற்கடுத்து, பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் எல்லையில், பாகிஸ்தான் மேற்கொண்ட தாக்குதலும், அதற்கு ஆப்கானிஸ்தான் கொடுத்துவரும் பதிலடிகளும், அதன் காரணமாக வர்த்தகங்கள் நிறுத்திவைக்கப்பட்டிருப்பதும் பாகிஸ்தானின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது.
பாகிஸ்தான் எம்.பி. ஒருவர், நாடாளுமன்றத்திற்குள் ஒரு தக்காளியை கொண்டுவந்து, “இதனை இங்கு கொண்டுவருவதே மிகவும் சவாலான விஷயம். இந்த ஒரு தக்காளியின் விலை ரூ. 75!” என பேசும் வீடியோவும் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகிவருகிறது. மேலும், சில அரசியல்வாதிகள், பாகிஸ்தானில், வங்கிக் கடன் வாங்கித்தான் தக்காளி வாங்க முடியும் என கடுமையாக அரசின் மீது விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர்.
பாகிஸ்தானில் கடந்த ஒரு மாதத்தில் தக்காளியின் விலை 400% உயர்ந்து தற்போது அங்கு ஒரு கிலோ தக்காளி ரூ. 600க்கு விற்கப்பட்டு வருகிறது. இதுபோலவே ஒரு கிலோ பூண்டு ரூ. 400க்கும், இஞ்சி கிலோ ரூ. 750க்கும், பட்டாணி கிலோ ரூ. 500க்கும் என விற்கப்பட்டுவருகிறது. இதனால், சாமானிய மக்கள் தங்களின் தினசரி வாழ்வை வாழ்வதற்கே கடுமையாக போராடிவருகின்றனர்.
இந்தியாவில் இருந்து இறக்குமதி நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்துவந்தது. தற்போது அந்நாட்டுடனும் ஏற்பட்ட மோதலால் அங்கும் வர்த்தகம் செய்ய முடியவில்லை. இதன் காரணமாகவே காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்து வருவதாக பொருளாதார அறிஞர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
