ஈரான் உடனான போரில், அமெரிக்காவும், இஸ்ரேலும் ஒரே நேர்கோட்டில் பயணிக்கின்றன என்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாக அறிவித்துள்ளார். ஈரான் விவகாரத்தில் அமெரிக்கா எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கை குறித்தும் தங்களுக்குத் தெரிவிக்கப்படுவதாகவும், இரு நாடுகளின் இலக்குகளும் ஒன்றே என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த அறிவிப்பு, மத்திய கிழக்கு மோதலில் ஒரு புதிய, ஒருங்கிணைந்த அத்தியாயத்தைத் தொடங்கி வைத்துள்ளது. இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட நெதன்யாகு, “ஈரானிடம் இருந்து பதப்படுத்தப்பட்ட யுரேனியத்தை அகற்றுவது, அந்நாட்டின் யுரேனியம் செறிவூட்டும் திறனை முழுமையாக ரத்து செய்வது, மற்றும் முக்கிய கடல் வழித்தடங்களைத் திறப்பது ஆகியவையே அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் பொதுவான இலக்குகள்” என்று கூறியுள்ளார்.
ஏப்ரல் 22-ஆம் தேதியுடன் போர் நிறுத்தம் முடிவுக்கு வரவுள்ள நிலையில், போர் மீண்டும் தொடங்கும் பட்சத்தில், எந்தவொரு சூழ்நிலையையும் சந்திக்கத் தயாராக இருப்பதாக அவர் எச்சரித்துள்ளார். ஈரான் ஒருபுறமிருக்க, லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பு மீதும் இஸ்ரேல் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது.
ஹிஸ்புல்லாவின் கோட்டையான பிந்த் ஜபீல் நகரை இஸ்ரேலியப் படைகள் நெருங்கிவிட்டதாகவும், தெற்கு லெபனானில் பாதுகாப்பு மண்டலத்தை விரிவுபடுத்த உத்தரவிட்டுள்ளதாகவும் நெதன்யாகு தெரிவித்துள்ளார். ஆனால், இந்த போர் முழக்கங்களுக்கு நடுவே, ஒரு ராஜதந்திர நகர்வும் அரங்கேறி வருகிறது.
அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன், லெபனானுடன் இதுவரை இல்லாத அளவுக்கு நேரடிப் பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதையும் நெதன்யாகு உறுதிப்படுத்தியுள்ளார். ஹிஸ்புல்லா அமைப்பை நிராயுதபாணியாக்குவதும், நிலையான அமைதியை எட்டுவதுமே இந்தப் பேச்சுவார்த்தைகளின் முக்கிய இலக்குகள் என்று அவர் கூறியுள்ளார்.
அதாவது, அமைதிப் பேச்சு என்ற ஒரு கதவு திறந்திருந்தாலும், போருக்கான அனைத்து கதவுகளையும் இஸ்ரேல் திறந்து வைத்தே இருக்கிறது என்பதே கள நிலவரமாக உள்ளது.
